" 2 டிஜிபி + ஒரு ஏடிஜிபி".. தமிழகத்தில் சீமா அகர்வால் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் தீ மற்றும் மீட்பு சேவைகளின் டிஜிபி சீமா அகர்வால்,ஆயுதப்படை டிஜிபி சந்தீப் மிட்டல், ஏடிஜிபி தினகரன் என்று 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று டிஜிபி, ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் 2 டிஜிபி, ஒரு ஏடிஜிபி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

* தமிழ்நாடு ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி வந்த சந்தீப் மிட்டல் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு காவலர் அகாடமியின் இயக்குநர் தினகரன், ஆயுதப்படை ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு தீ மற்றும் மீட்பு சேவைகளின் டிஜிபியாக இருக்கும் சீமா அகர்வால் தீயணைப்பு ஆணைய தலைவராகவும் செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றம்வழங்கப்பட்டதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. தமிழக முன்னாள் டிஜிபியான சங்கர் ஜிவால் தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்தார். இவர் கடந்த ஆண்டு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி (காவல்துறை தலைவர்) ஓய்வு பெற்ற அடுத்த சில மணிநேரங்களிலேயே இந்த பிரிவை திமுக அரசு உருவாக்கி சங்கர் ஜிவாலுக்கு இந்த பொறுப்பை வழங்கியது. கடந்த 9 மாதங்களாக அவர் தீயணைப்பு ஆணைய தலைவராக பதவி வகித்த நிலையில் தவெக ஆட்சி மாற்றத்தால் ராஜினாமா செய்தார். இதையடுத்து தான் அந்த பொறுப்பு சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (Tamil Nadu Uniformed Services Recruitment Board or TNUSRB) என்பது போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் பிரிவிற்கான ஆட்சேர்ப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற சுனில் குமாரை திமுக அரசு நியமித்து இருந்தது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில் கடந்த 17 ம் தேதி சுனில் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஆயுதப்படை டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சந்தீப் மிட்டல் மாற்றம் செய்யப்பட்டால் ஆயுதப்படை டிஜிபி பொறுப்பு காலியானது. இவர் தான் தமிழக ஆயுதப்படைக்கு தலைவராக இருந்தார். அவரது இடமாற்றம் காரணமாக தலைவர் தேவையாக உள்ளது. இதனால் தற்போது ஆயுதப்படை தலைவர் டிஜிபி என்பதை ஏடிஜிபியாக மாற்றம் செய்து ஏடிஜிபி அந்தஸ்து கொண்டவரின் தலைமையில் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தான் அந்த இடத்துக்கு ஏடிஜிபி தினகரன் ஐபிஎஸ்ஸை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications