கவுதம் அதானி பிறந்தநாளில் சாதனை... 52,306 யூனிட் ரத்த தானம்.. புதிய ரெக்கார்ட்
மும்பை: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு, அதானி அறக்கட்டளை சார்பில் நாடு முழுக்க மிக பெரிய ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. வரலாற்றுச் சாதனையாக இந்த முகாமின் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 52,306 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற இந்த ரத்த தான முகாம், இந்தியாவின் 21 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் மட்டுமின்றி 4 சர்வதேச பகுதிகளிலும் நடத்தப்பட்டது. மொத்தம் 754 நகரங்கள், கிராமங்கள் மற்றும் பகுதிகளில் ஒரே நேரத்தில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட 28,090 யூனிட் ரத்தத்தை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிக ரத்தம் சேகரிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சேவையே வழிபாடு
"சேவா ஹி சாதனா ஹை", அதாவது சேவையே வழிபாடு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்டு பல ஆயிரம் ரத்த தானம் செய்தனர். 6,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அதானி நிறுவன ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். இந்த ரத்த தான இயக்கம் நாடு முழுவதும் உள்ள 764+ ரத்த வங்கிகள், அரசு மருத்துவமனைகள், ரேட் க்ராஸ் மையங்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.
ரத்த தானம்
இந்த முகாம் மூலம் 52,306 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்ட நிலையில், இது சுமார் 23,538 லிட்டர் ரத்தத்துக்குச் சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் மற்றும் அதில் இருக்கும் பிளாஸ்மா, தட்டணுக்கள், பேக்கட் ரெட் செல்கள் உள்ளிட்டவை அவசர சிகிச்சைகள், பெரிய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும். இந்த ரத்த தானம் மூலம் 1.56 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
இந்த மாபெரும் ரத்த தான முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதானி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ப்ரீத்தி அதானி சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "கௌதம் அதானியின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. மக்களுக்கான சேவையே இறைவனுக்கான வழிபாடு என்ற அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது..
இதில் பங்கேற்ற அனைத்து அதானி குடும்ப உறுப்பினர்களுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அவர்களின் இந்த மனிதநேய செயல் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய வாழ்வை அளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதானி ரத்த தான முகாம்
அதானி அறக்கட்டளையின் ஆண்டு ரத்த தான இயக்கம் என்பது இன்று நேற்று தொடங்கியது இல்லை. 2011ஆம் ஆண்டு வெறும் 1,300 யூனிட் ரத்த தானத்தோடு தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த ரத்த தான முகாம் பெரிதாகிக் கொண்டே போனது. இப்போது இந்தியாவின் மிக பெரிய தன்னார்வ ரத்த தான இயக்கங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதானி அறக்கட்டளை, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, வாழ்வாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் உள்ள 7,200க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அதானி குழுமம் தனது சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications