கங்குவா தோத்துச்சு போங்க.. கத்தி கத்தியே காதை கிழிக்கும் கன்னட படம்.. ஓடிடியில் ட்ரோல் ஆகும் KD: The Devil
சென்னை: நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அக்கா மகன் துருவா சர்ஜா, சஞ்சய் தத், ரமேஷ் அரவிந்த், ரவிச்சந்திரன், ஷில்பா ஷெட்டி, கிச்சா சுதீப் (கவுரவ வேடம்) உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடித்து, கன்னடத்தில் வெளியாகி இப்போது Zee5 ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்குடனும் கிடைக்கும் படம்தான், KD: The Devil.
நடித்த கேரக்டர்கள் எல்லோருமே, கங்குவாவிற்கே கடுப்பேற்றும் அளவுக்கு கத்தி, கதறியபடியே இருப்பதுதான், இந்தப் படத்தை இப்போது, ட்ரோல் மெட்டீரியலாக மாற்றியுள்ளது. கன்னட திரைப்படங்களுக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. அதில் கேடி படமும் ஒன்று. அந்த ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அவர்கள் சீரியசாக செய்வதும் நமக்கு சிரிப்பை வரவழைக்கும். கேஜிஎப், காந்தாரா போன்ற ஒரு சில படங்கள்தான் இதில் விதிவிலக்கு.

படம் பார்க்க ஆரம்பிக்கும்போது 2 விஷயங்களை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். முதல் விஷயம்: கதவு ஜன்னல்கள் மூடியிருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். இரண்டாவது விஷயம்: கால் கிலோ பஞ்சு வாங்கி காதுகளை அடைத்துக்கொள்ளுங்கள். முதல் விஷயம் பக்கத்து வீட்டுக்காரருக்கு நல்லது, இரண்டாவது விஷயம் உங்கள் உடல் உறுப்புகளுக்கு நல்லது. சரி கத்தலுக்கு வருவோம். ஸாரி.. ஸாரி.. கதைக்கு வருவோம்.
ஊரே பயப்படும் டானுக்கெல்லாம் டான், டன்டணக்கான் டான் நம்ம சஞ்சய் தத். போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒன்னுக்கு அடித்து, அதில் "நாய்களே" என எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட, இதை உற்றுப் பார்த்து படிக்கும் போலீஸ் முகங்கள் உம்மென மாறுகிறது. உச்சாவை.. மறுபடியும் ஸாரிங்க.. உச்சா இருந்தவனை, பிடிக்க முடியவில்லையே என காவல்துறையே கண் கலங்குகிறது. இதற்காக அவர்கள் கூலிப்படையினரிடம் கெஞ்சி கூத்தாடி கொலை செய்ய வாடகைவாயர்களை இறக்குகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த ஸீனிலேயே இறக்கிறார்கள். ஏன்னா சஞ்சய் தத் அரிவாளிலேயே உடல்களில் கோலம் போடுகிறார்.
இவுங்கதான் இப்படி கோமாளித்தனம் செய்கிறார்கள் என்றால் ஹீரோயினாக நடித்துள்ள ரேஷ்மா நானய்யா, தொண்டைக்குள் மைக் செட் வைத்தவர்கள் போல சகட்டு மேனிக்கு கத்திக் கொண்டே இருக்கிறார். காதிலுள்ள கால் கிலோ பஞ்சும் நமக்கு போதவில்லை என்று தோன்றும் இடங்கள் அவையெல்லாம். எந்த அளவுக்கு ஹீரோயின் மீது கடுப்பாகிறது என்றால், சஞ்சய் தத் கோஷ்டி ஒருமுறை ஹீரோயினை தூக்கிப் போட்டு முதுகிலேயே மிதித்து, கொண்டையை பிடித்து இழுத்து, கதற கதற கத்தியை ஓங்கும்போதும் "ஐயோ விட்டுரு" என சொல்வதற்கு பதிலாக, "அப்பாடா இனி இவுங்க தொல்லை படத்தில் இல்லை" என தோணும் அளவுக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..
டாக் தேவா கேரக்டரில் நடித்துள்ளார் சஞ்சயத் தத். அவரது ஸ்டைலிஷ் நடிப்புதான் படத்தின் ஒரே ஆறுதல். ஆனால் அவரையும் ஓவர் பெர்பார்மன்ஸ் செய்ய வைத்து, பார்ப்பவர்களை பஞ்சராக்கியுள்ளது படக்குழு. ஒரு கட்டத்தில் டாக் தேவாவுக்கும், ஹீரோவுக்கும் முட்டிக்கொள்ள, அடுத்து ஹீரோ நூறு, நூற்றம்பது பேரை அரிவாளால் வெட்டி திரையை, ரத்தக் களறியாக்கி, அவர் பங்குக்கு மாஸ் காட்டுகிறார். பயந்து அலையும் ஹீரோ, தனது அண்ணன் ரமேஷ் அரவிந்த் சொல்லும் பகவத் கீதை ஸ்லோகங்களை கேட்ட பிறகு, உண்மையை உணர்வதும், பிறகு அவர் டிரான்ஸ்பர்மேஷன் ஆவதும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் கொடுத்த டிக்கெட்டுக்கு அந்த ஒரு காட்சி மட்டும் பலன் அளிக்கிறது.
படத்தில் நடப்பதெல்லாம் சம காலத்தில் நடக்கவில்லை. அதை குறிப்பிடுவதற்காக யானைக் கால் பேண்ட் போட்டால் பரவாயில்லை. வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைக்கிறேன் என தலையை கொதறு கொதறு என கொதறிவிட்டுள்ளனர். டாக் தேவா மற்றும் நம்ம ஹீரோ இடையேயான மோதல் கதைகளை பிளாஷ்பேக்காக சொல்லும் போலீஸ்காரரும் அப்பப்போ கத்தி கத்தி கதையை உச்ச ஸ்தாபியில் சொல்லி அவர் பங்குக்கு கடுப்படிக்கிறார். அவரை சுற்றியிருந்து கதை கேட்பவர்கள் முக பாவனை டாப்நாச். இப்படி பாலய்யா படங்களுக்கே பயங்கர போட்டி தரும்வகையில் ரிலீஸ் ஆகியுள்ள, இந்த படத்தை பார்த்துவிட்டீர்களா, உங்கள் கமெண்ட்ஸ் என்ன..


Click it and Unblock the Notifications
