சிங்கப்பூரிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடம்! 40 ஆண்டுகளில் நடந்த மாபெரும் புரட்சி
சிங்கப்பூர்: இன்று வானுயர்ந்த கட்டிடங்களுடன் வாயை பிளக்க வைக்கும் சிங்கப்பூர் எப்போதும் இப்படியே இருந்ததில்லை. வெறும் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட சிங்கப்பூர் முழுக்க குடிசை பகுதிகளே இருந்தது. ஆனால், அந்நாட்டு அரசு எடுத்த ஒரு கொள்கை முடிவு சிங்கப்பூரை மொத்தமாக மாற்றிவிட்டது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
தெற்காசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் இன்று உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், சுத்தமான சுற்றுச்சூழல், சிறந்த போக்குவரத்து வசதிகள் என வளர்ச்சியின் அடையாளமாக விளங்கும் சிங்கப்பூர், எப்போதுமே இதுபோல இருந்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிங்கப்பூர் முற்றிலும் வேறு விதமாக இருந்தது.

சிங்கப்பூர்
ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிசைப் பகுதிகள், நெரிசலான வீடுகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத பகுதிகளில் தான் வாழ்ந்தனர். ஆனால், சில ஆண்டுகளில் அங்கு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. இப்போது சிங்கப்பூர் மக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டு அரசின் ஹவுசிங் போர்ட் கட்டிய வீடுகளில் தான் வசித்து வருகின்றனர். அதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தாங்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையாளர்களாக உள்ளனர். சர்வதேச அளவில் ஹவுஸ் ஒனர்ஷிப் அதிகபட்சமாக இருக்கும் பகுதிகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்
பின்னணி
1947ல் சிங்கப்பூரின் நிலைமை ரொம்பவே மோசமாக இருந்தது. அப்போது சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் 9.38 லட்சமாக இருந்த நிலையில், அதில் 72 சதவீதத்தினர் நகரின் மையப் பகுதிகளில் நெரிசலான ஏரியாக்களில் வாழ்ந்தனர். குடிநீர், கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லாத இடத்தில் தான் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்தன. பலர் படிக்கட்டுகளின் கீழ், குறுகிய நடைபாதைகளில், சமையலறைகளின் அருகில் உறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. நகரத்தின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து புதிய குடிசைப் பகுதிகள் உருவாகிக் கொண்டே இருந்தன.
இந்தச் சூழலில் தான் 1950களின் கடைசியில் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றது. அதன் பிறகு, வீட்டு வசதி அரசின் முக்கிய முன்னுரிமையாக மாறியது. 1960ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசின் ஹவுஸிங் டெவலப்மெண்ட் போர்ட் உருவாக்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை அகற்றி மக்களுக்கு தரமான வீடுகளை வழங்கும் பணிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டது.
மெகா கட்டுமானம்
அதிக மக்கள் வாழ்வதற்கு ஏற்ப மிக பெரிய அளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. மறுவாழ்வு திட்டங்களின் மூலம் குடிசைகளில் வாழ்ந்த குடும்பங்கள் புதிய வீடுகளுக்கு மாற்றப்பட்டனர். வீடுகள் மட்டுமின்றி பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள், பூங்காக்கள் என முழுமையான நகரங்கள் உருவாக்கப்பட்டன. இதுவரை சிங்கப்பூர் ஹவுசிங் போர்ட் சார்பில் 10 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலமாகவே தென்கிழக்காசியாவின் மிகவும் நெரிசலான நாடுகளில் ஒன்றாக இருந்த சிங்கப்பூர், இன்று மிகவும் நேர்த்தியான மற்றும் திட்டமிடப்பட்ட ஒரு நகரமாக மாறியுள்ளது.
எல்லாமே மாறிடுச்சு
இப்போது சிங்கப்பூர் மக்களில் சுமார் 82 சதவீதத்தினர் இந்த ஹவுசிங் போர்ட் குடியிருப்புகளில் தான் வசிக்கின்றனர். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக அரசின் வாடகை வீடு திட்டங்களும் உள்ளன. மொத்த மக்கள்தொகையில் சுமார் 3 சதவீதம் பேர் இத்தகைய வாடகை வீடுகளில் வாழ்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் சொந்த வீடுகளிலேயே வசிக்கிறார்கள். சிங்கப்பூரை குடிசைகள் இல்லாத பகுதியாக மாற்றுவது மட்டுமின்றி, அந்நாட்டு மக்களை வீட்டு உரிமையாளர்களாகவும் அந்நாட்டு அரசு மாற்றியுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிசைப் பகுதிகள் ஆதிக்கம் செலுத்திய ஒரு நகரம், இப்போது திட்டமிட்ட குடியிருப்புகள் நிறைந்த நவீன நகரமாக மாறியுள்ளது. எல்லா நாடுகளிலும் இதே திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்ற போதிலும், அரசின் சரியான கொள்கை முடிவை எடுத்து அதை நீண்டகால திட்டமிடல் உடன் அமல்படுத்தினால் எந்தவொரு மாற்றமும் சாத்தியமே என்பதைச் சிங்கப்பூர் நிரூபித்துள்ளது.














Click it and Unblock the Notifications