ரூ.1450 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்! மாஸ் காட்டும் உ.பி.. தனியார் கூட்டு குறித்து யோகி பெருமிதம்
உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக ரூ.1450 கோடி மதிப்பில் 352 வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்துள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனியாரும் அரசும் கூட்டு சேர்ந்தால் என்னவெல்லாம் சாத்தியமாகும் என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் தொடர்பாக பேச்சு பரவலாக அடிப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் செய்த சாதனைகளை பாஜவினர் தொடர்ந்து பட்டியலிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்த மாநாடு குறித்து பேசிய அவர், "முதலீட்டாளர்கள் மாநாடு வழக்கமாக டெல்லி, மும்பையில்தான் நடக்கும். ஆனால் நாங்கள் முதலீட்டாளர்களை உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டு வந்துள்ளோம். எதை முடியாது என்று சொன்னார்களோ, அதை நாங்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதியை ஒதுக்கியுள்ளோம். இந்த பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறோம்.
மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும். அதேபோல உட்கட்டமைப்பில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி மாநிலத்தின் ஒவ்வொருவருக்கும் வீடு உறுதி செய்யப்படும். வீடுகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் வசதிகள் உறு செய்யப்படும். தேசிய தலைநகருக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை போல மாநில தலைநகர்களுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். லக்னோ இனி புதிய உட்கட்டமைப்புடன் சிறப்பாக மேம்படுத்தப்படும். லக்னோவின் உட்கட்டமைப்பு எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே நாங்கள் தலைநகரை மறு கட்டமைப்பு செய்கிறோம். இதில் பழைய சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படும். இன்று (மார்ச் 18) சுமார் ரூ.1450 கோடி மதிப்பில் 352 வளர்ச்சி திட்டங்களை நாங்கள் தொடங்கி வைத்திருக்கிறோம். இதேபோன்று திட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனில் நாடு 2047ம் ஆண்டு வல்லரசாகும். அடல் பிஹாரி வாஜ்பாய் லக்னோவை மேம்படுத்துவது குறித்து கனவு கண்டார். அப்போதைய பிரதமராக இருந்த அவரும், அப்போதைய நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கும் பல புதிய திட்டங்களை உத்தரப் பிரதேசத்திற்காக அறிவித்தனர்" என்று கூறியுள்ளார். கொல்வின் தாலுகேதார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் அவர் மேற்குறிப்பிட்டவாறு பேசியிருக்கிறார். இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications