இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் உ.பி அரசு! விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் யோகி
லக்னோ: உத்தரப் பிரதேச இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று உத்தரப் பிரதேசத்தில் ரூ.72 கோடி மதிப்பில் 42 வளர்ச்சித் திட்டங்களுக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், "பதி விஹார் காலனியில் ரூ.6.18 கோடி செலவில் கட்டப்படவுள்ள மினி விளையாட்டு வளாகத்திற்கு நான் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்த பகுதி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். சண்டையும் சர்ச்சையும் நிறைந்த எப்போதும் பதட்டமான பகுதியில் இதுவும் ஒன்று.

ஆனால், தற்போது இந்நிலைமை மாறியிருக்கிறது. உத்தரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் நாங்கள் விளையாட்டு மைதானங்களை கட்டி வருகிறோம். இது இளைஞர்களை விளையாட்டு நோக்கி நகர்த்துகிறது. இன்று 72 கோடி மதிப்பிலான 42 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இது தவிர நகரில் 6 இடங்களில் திருமண மண்டபங்களை கட்ட உத்தரவு பிறப்பித்திருக்கிறேன். திருமண மண்டபங்கள் இன்றைக்கு ஏழை மக்களின் கனவாக இருக்கிறது. இதனை நிறைவேற்றும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
எனவே ரூ.1 முதல் 1.5 கோடி வரை நிதி ஒதுக்கி 6 திருமண மண்டபங்களை கட்ட உத்தரவு பிறப்பித்திருக்கிறேன். இந்த மண்டபத்தில் 200-300 பேர் வரை தாராளமாக அமரலாம். இது சாமானிய மக்களுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு விடப்படும். இப்படியாக சாமானிய மக்களின் அரசாங்கமாக இந்த அரசு இருக்கிறது. எளிய மக்களின் கனவுகளை நிஜமாக்குவதே இந்த அரசின் பிரதான நோக்கமாகும். இளைஞர்களை நாங்கள் நல்வழிப்படுத்தி வருகிறோம்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications