மேடையில் ‛ஜெய் ஸ்ரீராம்’ சொன்ன மாணவர்.. உடனே பேராசிரியை போட்ட உத்தரவு.. பரபர உத்தர பிரதேசம்
லக்னோ: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை பார்த்து ‛ஜெய் ஸ்ரீராம்' இந்திய ரசிகர்கள் கூறிய வீடியோ வெளியாகி விவாதத்தை கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக உத்தர பிரதேசத்தில் உள்ள கல்லூரி மேடையில் ‛ஜெய் ஸ்ரீராம்' என மாணவர் கூறிய நிலையில் பெண் பேராசிரியர் போட்ட அதிரடி உத்தரவு குறித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சில நாட்களுக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

அதாவது முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் ஷர்மா 86 ரன்கள் குவித்து இருந்தார்.
இதன்மூலம் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் ஒருமுறை கூட தோல்வியடையாமல் 8வது முறையாக இந்தியா வென்றது. இதற்கிடையே தான் இந்த போட்டி என்பது பெரிய அளவில் பேசும் பொருளானது. அதாவது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி மைதானத்தில் இருந்து சென்றபோது ரசிகர்கள் ‛ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்டனர். இது விவாதத்தை கிளப்பியது.
இதுதொடர்பாக வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. அதோடு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ‛ஜெய் ஸ்ரீராம்' சொல்வதில் தவறு எதுவும் இல்லை என கூறினர். இதனால் தான் தொடர்ந்து விவாதமானது.
இந்நிலையில் தான் தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் மாணவர் ஒருவர் மேடை ஏறினார். அப்போது மேடைக்கு கீழ் இருந்த மாணவர்கள் ‛ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டு அவரை வரவேற்றனர். அதை கேட்டவுடன் மேடையில் இருந்த அந்த மாணவர் ‛ஜெய் ஸ்ரீராம் நண்பர்களே' என பதிலளித்தார்.
இதையடுத்து அங்கிருந்த பெண் பேராசிரியர் ஒருவர் வேகமாக மேடை அருகே சென்று அந்த மாணவரை மேடையில் இருந்து இறங்கி செல்லும்படி அறிவுறுத்தினார். அதோடு அந்த பேராசிரியர் ஹிந்தி மொழியில், ‛‛இது கலாச்சார நிகழ்ச்சி. இதுபோன்ற கோஷங்களுக்கு அனுமதியில்லை'' என கூறி மேடையை விட்டு இறங்கி செல்லும்படி ஆக்ரோஷமாக கூறினார். இதனால் ஷாக்கான அந்த மாணவர், ‛‛மாணவர்கள் கூறியதால் பதிலுக்கு தெரிவித்தேன்'' எனக்கூறி பேராசிரியர் கேட்கவில்லை.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு ஒரு தரப்பு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இன்னொரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் அந்த வீடியோ குறித்துஅறிந்த காஜியாபாத் போலீஸ் கமிஷனர் இந்த விஷயம் குறித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராசிங்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications