இதுக்கு பேரு வறட்டி..இல்லை இல்லை அது மாட்டுசாணம்! அண்ணனுக்கு வாட்ச் ஆர்டர்..காத்திருந்தவருக்கு ஷாக்!
லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் தனது சகோதரனுக்கு தீபாவளி பரிசு வழங்குவதற்காக ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் கைக்கடிகாரத்தை ஆர்டர் செய்த பெண்ணுக்கு மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட 4 வறட்டிகள் பார்சலில் அனுப்பப்பட்ட சம்பவம் இணைய தளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது.
நவீன யுகத்தில் செல்போன்கள் நம் வாழ்வை ஆக்கிரமித்துள்ள நிலையில் குடும்பத்திலுள்ள அனைவருமே இருபத்தி நான்கு மணி நேரத்தில் பெரும்பகுதியை செல்போன்களில் உள்ள சமூக வலைதளங்களை கழித்து வருகின்றனர்.
செல்போன்களில் உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் ஒரு மனிதனுக்கு தேவையான எதை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்

ஆன்லைன் ஆப்கள்
தற்போது பண்டிகை காலம் என்பதால் பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் பலரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் தங்களுக்கு தேவையான உடைகள், பரிசு பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர்.

ப்ளிப்கார்ட் நிறுவனம்
அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆன்லைனில் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு வந்த பொருள் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்ற பெண் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் தனது சகோதரருக்காக சுமார் 1300 ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார்.

மாட்டு வறட்டி
கடந்த சில நாட்களுக்கு முன்பு ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் அவருக்கு ஒரு பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. அந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது நீலம் யாதவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது சகோதரருக்கு ஆர்டர் செய்த வாட்ச்க்கு பதில் அதில் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட நான்கு வறட்டிகள் டெலிவரி செய்யப்பட்டிருந்தது.

பெண் அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பார்சலை டெலிவரி பாயிடம் திரும்ப கொடுத்துவிட்டு பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில் தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பணம் திரும்ப கிடைத்தாலும் தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதால் இது போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications