அசர வைக்கும் அயோத்தி ராமர் கோயில் கதவுகள்.. வடிவமைத்த தமிழர்கள்! என்னாது அந்த ஊர்க்காரர்களா?
லக்னோ: அயோத்தி ராமர் கோயிலுக்கான கதவுகளை தமிழர்கள்தான் வடிவமைத்தனர் என்ற தகவல் பெருமிதம் கொள்ள வைக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடிதான் நிறுவ உள்ளார்.

விழாவில் இந்து மதத்தை சேர்ந்த தலைவர்கள், நடிகர்கள், துறவிகள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து 350-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டன.
இதை கொண்டு ராமர், சீதாதேவியின் கருவறைகளும் அமைக்கப்பட்டன. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி லக்னோவே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டபம், சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும் வழி, லட்சுமணன், ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்பட 44 வாசல்களில் தேக்கு மரத்தில் ஆன கதவுகள் தயாராகி உள்ளது.
இந்த கதவுகளை யார் வடிவமைத்தது தெரியுமா, மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் படித்த குமரி மாவட்ட வெள்ளிசந்தையை சேர்ந்த மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அழகுற வடிவமைத்து முடித்துள்ளனர். சிற்பக் கலைஞர்களை கோயில் நிர்வாகத்தினர் அயோத்திக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கேயே அவர்களை எல்லாம் தங்க வைத்து கதவுகளை அமைக்கும் பணிகளை முடிக்க வைத்தனர். இரு யானைகள், இரு தேவ கன்னிகைகள் வரவேற்பது போல் தாமரை மலர்வது போலும் முன் மண்டப கதவுகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்காக தேக்கு மரங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளில் இருந்து பல 100 ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடிய மரங்கள் வாங்கப்பட்டன.
இது மட்டுமல்லாமல் கோயில் பிரதான வாயிலுக்கு 8 அடி உயரத்தில் மயில் சிற்பங்கள் அலங்காரத்துடன் 4 மடிப்பு அமைப்பில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. முகப்பு மண்டபத்தின் மேல் மாடிக்கு செல்ல படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் சிற்பிகள் உருவாகிய கதவுகளுக்கு செப்புத் தகடுகள் பொருத்தி தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
கதவுகள் மட்டுமல்லாமல் ராமர் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்ய சிலையை கொண்டு செல்வதற்காக சிறிய பல்லக்கையும் மாமல்லபுரம் சிற்பிகள் செய்து கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications