உடனே ஸ்டாப் பண்ணுங்க.. மதமாற்றம் செய்வது உரிமையாகாது.. மத உரிமை இருக்கவும் முடியாது: ஹைகோர்ட் அதிரடி
லக்னோ: குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதற்கு உள்ள உரிமை அனைவருக்கும் பொதுவானது என்றும், குறிப்பிட்ட மதத்துக்கு மற்றவர்களை மதமாற்றம் செய்யும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, ஒருவருக்கு தன்னுடைய மதத்தை பிரச்சாரம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.. எனினும், ஏழை மக்களை தவறாக வழிநடத்தி மதமாற்றம் செய்வதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், மத மாற்றங்கள் குறித்து அலகாபாத் ஹைகோர்ட் சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறது.

என்ன நடந்தது?: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர், கைலாஷ் என்பவருக்கு எதிராக புகார் ஒன்றினை தந்திருந்தார்.. அந்த புகாரில், "கைலாஷ் என்னுடைய மனநல பாதிக்கப்பட்ட சகோதரரை சிகிச்சைக்கு என்று சொல்லி டெல்லி அழைத்து வந்து, மதம் மாற்றம் செய்துவிட்டார். எங்களது கிராமத்திலும் பலருக்கும் மதமாற்றம் செய்து வைத்திருக்கிறார். மதம் மாறினால் பணம் தருவதாகக் சொல்லி, அப்பாவி மக்களை மதம் மாற்றி வருகிறார்" என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் கைலாஷ் கைது செய்யப்பட்டார்.. இதையடுத்து, அந்த நபர் அலகாபாத் ஹைகோர்டில் ஜாமீன் கோரினார்.. இந்த ஜாமீன் மனுவானது, நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி சொன்ன கருத்துக்கள் இவைதான்:
ஜாமீன்: "இந்த ஜாமீனை அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராகவே மாறியிருப்பார்கள்.. மதமாற்றம் செய்ய நடக்கும் கூட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பின் 25வது பிரிவில் சொல்லப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதால், இந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்..
ஒரு மதத்தை பிரச்சாரம் செய்ய சட்டத்தில் அனுமதி உண்டு என்றாலும், பிரச்சாரம் என்பது வெறும் மதத்தை வளர்ப்பதற்காக மட்டுமே உள்ளதே தவிர, யாரையும் அவரது மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாற்றுவதற்கு கிடையாது.
கிறிஸ்தவர்கள்: உத்தரப்பிரதேசத்தின் நிறைய இடங்களில், ஏழை மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டதாக நீதிமன்றத்திற்கு தெரிய வந்துள்ளது... இது மிகவும் தீவிரமான விஷயம்
உத்தரப்பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி, இப்படி ஆசைகாட்டி, வற்புறுத்தி, மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்வது குற்றமாகும்.. எனவே, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க முடியாது. நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் 25வது பிரிவின்படி, ஒருவர் தாம் விரும்பிய தொழில் செய்தல், மனதில் உருவாகும் கருத்தை சுதந்திரமாக தெரிவிப்பது, மத நம்பிக்கைகளை பின்பற்றுவது போன்ற உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, அரசியலமைப்பு சட்டத்தின் இந்த பிரிவின்படி, ஒருவர் தான் விரும்பும் அல்லது பின்பற்றும் மதத்தை கடைப்பிடிக்கலாம்.. அது தொடர்பாக தாராளமாக கருத்தையும் தெரிவிக்கலாம். ஆனால், மற்றவர்களை மதமாற்றம் செய்யும் உரிமை அதில் வழங்கப்படவில்லை...
விரும்பிய மதம்: விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை உங்களுக்கு உள்ளதுபோல், மற்றவர்களுக்கும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்... மற்றவர்களை மதமாற்றம் செய்வதை உரிமையாக கருத முடியாது" என்று அந்த உத்தரவில் தெரிவித்திருக்கிறது அலகாபாத் ஹைகோர்ட்.
இந்நிலையில், மீண்டும் மதமாற்றம் செய்வது குறித்த வழக்கு ஒன்று இதே அலகாபாத் ஹைகோர்ட்டுக்கு வந்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ராவ் நாயக் என்பவர் ஏழை மக்களை மூளைச்சலவை செய்து மதமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது...
மத மாற்றம்: இதையடுத்து, ஜாமீன் கேட்டு ஸ்ரீனிவாஸ் ராவும் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கும் அலகாபாத் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது... ஸ்ரீனிவாஸ் ராவ் நாயக்கின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் தன்னுடைய உத்தரவில் சொன்னதாவது:
"மஹராஜ்கஞ்சில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த ஏழை எளிய மக்களை மத மாற்றம் செய்யும் நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கின்றன. இதுபோன்ற ஒரு மத மாற்ற நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லபட்ட ஒருவர், அங்கிருந்து தப்பி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
கிறிஸ்தவ மதம்: தகவல் அளித்த அந்த நபரின் வாக்குமூலத்தின்படி, குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்களை அழைத்து, நோய்களில் இருந்தும், வறுமையில் இருந்தும் விடுபட, கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும் பலரை கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்துள்ளனர்.
நோய்களில் இருந்தும், வறுமையில் இருந்தும் விடுபட வேண்டுமானால், கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளனர்... பலரை கட்டாயப்படுத்தி மத மாற்றமும் செய்துள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தின் 25வது பிரிவின்படி, ஒருவர் தாம் விரும்பிய தொழில் செய்தல், மனதில் உருவாகும் கருத்தை சுதந்திரமாக தெரிவிப்பது, மத நம்பிக்கைகளை பின்பற்றுவது ஆகிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
உரிமை: எனவே, இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றுவதற்கும், மற்றும் பிரச்சாரம் செய்வதற்கும் அடிப்படை உரிமையை வழங்குகிறது. ஆனால் மத மாற்றத்தை அனுமதிக்காது" என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத சுதந்திரத்திற்கான உரிமைகளில் மற்றவர்களை மதம் மாற்றும் உரிமை இல்லை என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதும், மதமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதும், மதமாற்றம் செய்ய நடக்கும் கூட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதும், பலரது கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications