ஒரே வாரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள்! உ.பியின் பசுமையை அதிகரிக்க யோகி ஆதித்யநாத் முன்வைத்த மாஸ் யோசனை
லக்னோ: கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு குழாய் மூலம் தூய்மையான குடிநீரை விநியோகம் செய்யும் பணிகளை உத்தரப் பிரதேச அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் 'ஒரு-குழாய்-ஒரு-மரம்' எனும் பிரசாரத்தை மாநில அரசு தொடங்குகிறது.
தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதன்மையானதாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஒரேயொரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதேபோல பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

வழக்கமாக மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் நடைபெறும் இந்த மாநாட்டை முதன் முதலாக லக்னோவில் நடத்தி காட்டியுள்ளார் யோகி ஆதித்யநாத். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் மாநிலத்திற்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு தூய்மையான குடிநீரை கொண்டு சேர்க்க மாநில அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்காக 'ஹர்-கர்-ஜல்' எனும் திட்டத்தையும் யோகி ஆதித்யநாத் தொடங்கியுள்ளார். ஊரக குடிநீர் வழங்கல் துறை, வீடுகள் தோறும் குடிநீர் குழாய்களை கொண்டு சேர்த்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் மற்றொரு புதிய அம்சத்தை யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களில் நாளொன்றுக்கு 40 ஆயிரத்திற்கும் மேல் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படி குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் வீடுகளுக்கு இனி ஓர் மரக்கன்றையும் கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் பசுமையை இரட்டிப்பாக்க முடியும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த புதிய திட்டம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
வீடுகளுக்கு ஓர் மரக்கன்று வழங்கப்பட்டால் ஒரே வாரத்தில் உ.பி முழுவதும் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இது மாநில வரலாற்றில் ஓர் புதிய சாதனையாகும். எனவே தற்போது இதற்கான பிரசாரத்தை ஊரக குடிநீர் வழங்கல் துறை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications