2ம் வகுப்பு மாணவன் நரபலி! பள்ளியின் வளர்ச்சிக்காக உரிமையாளர் செய்த கொடூரம்! ஆசிரியர்களும் உடந்தையாம்
லக்னோ: பள்ளிக்கு நல்லது நடக்க வேண்டும்.. நிதி நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக அங்குப் படித்த 2ம் வகுப்பு மாணவன் ஒருவனை அந்த பள்ளியின் இயக்குநர், ஆசிரியர்களே இணைந்து நரபலி கொடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பள்ளியின் இயக்குநர் அவரது தந்தை உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
எப்போதும் உழைப்பே நமக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தரும். ஆனால், அதை விட்டுவிட்டு சிலர் மூட நம்பிக்கை பின்னால் போகிறார்கள். அதைச் செய்தால் நல்லது நடக்கும், இது செய்தால் நல்லது நடக்கும் என்று ஏதேதோ செய்கிறார்கள்.

சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்களால் உயிரிழப்புகளும் கூட ஏற்படுகிறது. அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்துள்ளது.
கொடூரம்: பள்ளிக்குச் செழிப்பு மற்றும் புகழைக் கொண்டு வர நினைத்த ஓனர், அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்காமல் பிளாக் மேஜிக் பக்கம் போய் இருக்கிறார்கள். அப்படி யாரோ சொன்ன சில மோசமான ஐடியாவால் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் 2ஆம் வகுப்பு மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செப். 22ம் தேதி இந்த கொடூரம் நடந்துள்ளது. அந்த பள்ளி விடுதியில் தங்கி இருந்த 2வம் வகுப்பு சிறுவனை 3 பேர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்ன்றனர். சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற போது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "இவர்கள் கடந்த செப். 6ம் தேதியே இதற்கு முயன்றுள்ளனர். வேறு ஒரு சிறுவனை அப்போது நரபலி கொடுக்க திட்டமிட்டு இருந்தனர். இருப்பினும், அந்த சிறுவன் திடீரெ கத்தியதால் எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இப்போது அந்த சிறுவனுக்கு நாங்கள் நடத்திய மருத்துவ சோதனையில் பல இடங்களில் காயம் இருப்பது உறுதியாகியுள்ளது.
என்ன நடந்தது: இதையடுத்து கடந்த செப். 22ம் தேதி மீண்டும் அவர்கள் நரபலி சடங்கை முயன்றுள்ளனர். பள்ளியின் பின்புறமுள்ள ஒரு கிணற்றின் அருகே பலியிட முடிவு செய்துள்ளனர். தூங்கிக் கொண்டு இருந்த சிறுவனை அங்குத் தூக்கிச் சென்றுள்ளனர். இருப்பினும், போகும் வழியிலேயே அந்த சிறுவன் விழித்துக் கொண்டான். இதனால் அச்சமடைந்து பள்ளியிலேயே வைத்து அந்த சிறுவனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டனர்" என்றார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கிணற்றுக்கு அருகில் நரபலி கொடுக்க வைத்திருந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூடநம்பிக்கை காரணமாகவே இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். அந்த பள்ளி கடந்த சில காலமாகவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்துள்ளது. பள்ளிக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக யாரோ சொன்னதைக் கேட்டு நரபலி கொடுக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
தந்தை கண்ணீர்: இந்த கொடூரம் குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், "முதலில் பள்ளியில் இருந்தே எனக்குக் கால் வந்தது. குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதாகச் சொல்லி நேரில் வரச் சொன்னார்கள். உடனே பதறியடித்துக் கொண்டு கிளம்பினேன். அப்போது மற்றொரு கால் வந்தது.
உடல்நிலை மிக மோசமாகிவிட்டதால் உயர் சிகிச்சைக்கு வேறு இடத்திற்கு அழைத்து செல்வதாகச் சொன்னார்கள். நாங்களும் அவர்கள் காரை பின்தொடர்ந்து சென்றோம். அவர்கள் காரை நிறுத்தவில்லை. சதாபாத் என்ற இடத்தில் நாங்கள் அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டோம். உள்ளே எனது குழந்தையின் உயிரற்ற சடலம் இருந்தது. அதைப் பார்த்தும் நான் உடைந்து போய்விட்டேன்" என்று கண்ணீருடன் கூறினார்.
கைது: இந்த கொடூர குற்றம் தொடர்பாகப் பள்ளியின் இயக்குநர், அவரது தந்தை, ஆசிரியர்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளதாக ஹத்ராஸ் போலீஸ் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் தெரிவித்துள்ளார். நரபலி கொடுக்க முயன்ற போது இந்த கொலை நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications