கெஜ்ரிவாலை தொடர்ந்து அகிலேஷ் யாதவுக்கு சம்மன்.. குவாரி முறைகேடு வழக்கில் சிபிஐ அதிரடி.. நாளை விசாரணை
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் தலைவராக உள்ள அகிலேஷ் யாதவுக்கு குவாரி முறைகேடு வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. நாளைய தினம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்மன் அகிலேஷ் யாதவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருப்பவர் அகிலேஷ் யாதவ். உத்தர பிரதேசத்தில் முக்கிய அரசியல் கட்சியாக அவரது கட்சி விளங்கி வருகிறது. தற்போது உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். மாறாக சமாஜ்வாதி கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறது. அகிலேஷ் யாதவ் இதற்கு முன்பு உத்தர பிரதேச முதல்வராக பொறுப்பு வகித்தார். கடந்த 2012 முதல் 2017 ம் ஆண்டு வரை 5 வருடம் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தார்.இந்த சமயத்தில் அகிலேஷ் யாதவ் கனிம சுரங்கத்துறையை வைத்திருந்தார். அதாவது 2012 முதல் 2013ம் ஆண்டு ஜுன் மாதம் வரை அவர் கனிம வளத்துறையை நிர்வகித்து வந்தார்.
இந்த சமயத்தல் ஷாம்லி, கவுஷாம்பி, பாதிபூர், டியோரியா, சாஹாரன்பூர், ஹமீர்பூர், சித்தார்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டவிரோதமாக குவாரி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிஐ சார்பில் அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முட்டு சந்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி.. கரை சேர்த்த பிரியங்கா.. இந்திரா பேத்தியாக மாறிய தருணம்
அந்த சம்மனில் நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அகிலேஷ் யாதவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 63 இடங்களிலும் போட்டியிட உள்ளது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசத்தில் நடந்த ராகுல் காந்தியின் ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரையில்’ பங்கேற்றார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஜார்க்கண்ட்டில் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதேபோல் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 7 முறை அவர் ஆஜராகாத நிலையில் 8 வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்போது அகிலேஷ் யாதவ் இணைந்துள்ளார். அமலாக்கத்துறைக்கு பதில் குவாரி முறைகேடு வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பது தெரியவந்தால் அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கும். இதனால் அகிலேஷ் யாதவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications