நுபுர்சர்மா சர்ச்சை: வெடித்த வன்முறை! உபியில் கல்வீச சிறுவர்களை பயன்படுத்தினர்- போலீஸ் குற்றச்சாட்டு
லக்னோ: நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நேற்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த போராட்டம் வன்முறையானது. அப்போது சமூக விரோதிகள் சிறுவர்களை பயன்படுத்தி போலீசார், அதிகாரிகள் மீது கற்களை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதத்தில் சர்ச்சையாக பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி, கத்தார், சவுதி அரேபியா உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு கிளம்பின.
இந்நிலையில் நேற்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

உத்தர பிரதேசத்தில் வன்முறை
இந்த போராட்டத்தின்போது நுபுர் சர்மாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். உத்தர பிரதேச மாநிலத்தில் சாரன்பூர், பிரக்யராஜ், ஹத்ராஸ், மொரடாபாத், அம்பேத்கர் நகர், பெரோடாபாத்தில் பகுதிகளில் பேராட்டம் நடந்தது. இதில் கல்வீசப்பட்டதால் வன்முறையானது. மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Recommended Video

தீவைப்பு சம்பவம்
குறிப்பாக பிரயாக்ராஜிலும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக மாறியது. போலீஸ்காரர்கள் மீது கல்வீசப்பட்டது. மோட்டார் சைக்கிள், கார்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீஸ் வாகனத்தக்கு தீவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் அவர்களை விரட்டியடித்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5 ஆயிரம் பேர் மீது வழக்கு
இதுகுறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில் ‛‛பிரயாக்ராஜ் வன்முறை தொடர்பாக நேற்று இரவு வரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார். இதுபற்றி பிரயாக்ராஜ் மண்டல ஏடிஜிபி பிரேம் பிரகாஷ் கூறுகையில், ‛‛ கல்வீச்சில் விரைவு அதிரடி படையின் கான்ஸ்டபிள் காயமடைந்தார். இதுதொடர்பாக குல்தாபாத் போலீஸ் நிலையத்தில் 29 பிரிவுகளில் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 70 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது'' என்றார்.

சிறுவர்களை பயன்படுத்தி கல்வீச்சு
இந்நிலையில் வன்முறை குறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் குமார் இன்று கூறுகையில், "சமூக விரோதிகள் போலீசார் மீது கற்களை வீச சிறுவர்களை பயன்படுத்தினர். வன்முறை தொடர்பாக 29 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது'' என்றார்.

அதிகரிக்கும் கைது எண்ணிக்கை
உத்தர பிரதேசத்தில் 6 இடங்களில் நடந்த வன்முறை தொடர்பாக இன்று காலை நிலவரப்படி மொத்தம் 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாரன்பூரில் 48 பேர், பிரக்யராஜில் 68 பேர், ஹத்ராஸில் 50 பேர், மொரடாபாத்தில் 25 பேர், பெரோடாபாத்தில் 8 பேர், அம்பேத்கர் நகரில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வன்முறையின் காரணம் பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications