முடிஞ்சா தடுத்து பாருங்க.. சுவர் ஏறி குதித்து அலறவிட்ட அகிலேஷ் யாதவ்.. ஒரே பரபரப்பு.. என்ன நடந்தது?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று திடீரென்று சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் சுவர் ஏறி குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்கு எதிர்க்கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் அதிக நாடாளுமன்ற தொகுதி என்பது உத்தர பிரதேச மாநிலத்தில் தான் உள்ளது.
இதனால் உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக இடங்களை பிடிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணி மூலம் அதிக தொகுதிகளை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறது. இதனால் தற்போது இருந்தே உத்தர பிரதேச நாடாளுமன்ற தேர்தல் களம் என்பது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் இன்று அகிலேஷ் யாதவ் சுவர் ஏறி குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஜேபிஎன்ஐசி மையம் உள்ளது. இந்த மையத்தில் சோசலிஸ்ட் தலைவர் ஜேபி நாராயணனின் சிலை உள்ளது. இந்நிலையில் தான் இன்று ஜேபி நாராயணனின் சிலைக்கு அகிலேஷ் யாதவ் மாலை அணிவிக்க சென்றார்.
அப்போது பராமரிப்பு பணி நடப்பதாக கூறி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அகிலேஷ் யாதவ் அந்த மையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டைகளால் ஆன சுவர் போன்ற அமைப்பை ஏறி குதித்து உள்ளே சென்று ஜேபி நாராயணனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான போட்டோ, வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதுபற்றி அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஜேபி நாராயணன் சிறந்த சோசலிச சிந்தனையாளர். அவர் சமூக நீதிக்காக பாடுபட்ட வக்கீல் ஆவார். அவரது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுக்க கேட் போட்டு பாஜகவினர் அலைக்கழிக்கின்றனர். அவருக்கு மரியாதை செலுத்துவதை தடுக்கவே பாஜகவினர் இதனை செய்துள்ளனர்'' என சாடியுள்ளார்.
மேலும் ஜேபி நாராயணன் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தார். எமர்ஜென்சியின் போது காங்கிரஸின் ஊழல் மற்றும் அநீதியான ஆட்சிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து நாட்டின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தையும் அவர் அமைத்தார். அதோடு 1970 காலக்கட்டத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணியை முன்னெடுத்த பெருமை ஜேபி நாராயணனையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications