சீனியர் டார்ச்சர்.. 45 நாட்களாக ஒரு நிமிஷம் கூட தூங்கல.. உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்! ஷாக் கடிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றி வந்த 42 வயது தருண் சக்சேனா, வேலை பிரஷர் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். டார்கெட்டை முடிக்குமாறு உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும்.. இல்லையென்றால் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்வோம் என மிரட்டியதாகவும் அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டில் வேலை பிரஷர் என்பது மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. சமீபத்தில் கூட புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் வேலை அழுத்தம் காரணமாக உயிரிழந்தார்.

அவரது தாய் அந்நிறுவனத்தின் தலைவருக்கு எழுதிய கடிதம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மீண்டும் அதேபோன்ற ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
பஜாஜ் ஃபைனான்ஸ்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றி வந்தவர் தருண் சக்சேனா.. இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் ஜான்சி என்ற பகுதியில் வசித்து வந்தார். இவர் இன்று காலை அவரது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதம் குறித்த தகவல்கள் நமது நாட்டில் ஒர்க் பிரஷர் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
தனது மனைவிக்கு தருண் எழுதிய இந்த ஐந்து பக்க கடிதத்தில், தன்னால் முடிந்தவரை முயன்றும் கம்பெனி டார்கெட்களை அடைய முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளார்.. தனது பகுதியில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதே அவரது பணியாகும்.
டார்கெட் அடைய முடியவில்லை: இருப்பினும், பல்வேறு காரணங்களால் டார்கெட் தொகையை அவரால் அடைய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தனது கடிதத்தில் குறிப்பிட்ட தருண், இதனால் எங்கு வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் தனக்கு இருந்ததாகத் தெரிவித்தார்.. மேலும், உயர் அதிகாரிகள் பல முறை தன்னை அவமானப்படுத்தியதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தருண் தனது கடிதத்தில் மேலும் கூறுகையில், "எதிர்காலத்தைப் பற்றி கவலையாகும் பதற்றமாகவும் இருக்கிறது. இதை யோசித்து யோசித்து நான் சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டேன்.. இது போதும்.. நான் போகிறேன்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வசூலிக்க முடியாத கடன்களுக்கான இஎம்ஐகளை பல முறைத் தானும் தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்களும் கட்ட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தயார் இல்லை: மேலும் அவர், "இதில் உள்ள சிக்கல்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் சொல்லப் பலமுறை முயன்றேன். ஆனால், அவர்கள் நான் பேசுவதைக் கேட்கக் கூட தயாராக இல்லை. இதனால் கடந்த 45 நாட்களாக நான் தூங்கவில்லை. சாப்பிடக் கூட முடியவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். இதைச் சொன்னால் என்ன ஆனாலும் பரவாயில்லை டார்கெட்டை முடி என்கிறார்கள் சீனியர்கள்.. முடியவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லும்படி மிரட்டுகிறார்கள்.
ஆண்டு இறுதி வரை குழந்தைகளுக்குத் தேவையான பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டேன். என்னால் முடியவில்லை.. இந்த முடிவுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நமது குழந்தைகளை நல்லா பார்த்துக்குங்க. அப்பா, அம்மா இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதே இல்லை. இப்போது ஒன்றை மட்டும் கேட்கிறேன்.. தயவு செய்து நமது வீட்டில் இரண்டாவது மாடியைக் கட்டுங்கள். அப்போது தான் எனது குடும்பத்தினர் அங்கு நிம்மதியாக வாழ முடியும்" என்று கூறியிருக்கிறார்.
உருக்கம்: மேலும், குழந்தைகள் நன்றாகப் படித்து அம்மாவைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது குடும்பத்தினருக்குக் காப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். உயர் அதிகாரிகளின் பெயர்களையும் தனது கடிதத்தில் குறிப்பிட்ட அவர், அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கும்படி குடும்பத்தினரைக் கேட்டுக் கொண்டார். தனது இந்த முடிவுக்கு அவர்களே காரணம் என்பதை அதில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக தருணின் உறவினர் கவுரவ் சக்சேனா கூறுகையில், "சீனியர்கள் மிக மோசமாக தருணிடம் நடந்து கொண்டனர். இன்று காலை 6 மணிக்கே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்தனர். வேலைக்கே லாயக்கு இல்லை.. டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தருண் தனக்கு டார்ச்சர் தந்த சீனியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்" என்றார்.
போலீஸ்: இந்தத் தகவலை உறுதி செய்த அப்பகுதி போலீசார், குடும்பத்தினர் புகார் அளித்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். அதேநேரம் இது குறித்து பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் இதுவரை வரவில்லை.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications