உ.பி.யில் யோகியின் பாஜக அரசு மீது ஆர்எஸ்எஸ் அதிருப்தி? ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்ய மறுப்பு?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாஜக அரசு மீது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அதிருப்தியில் இருப்பதாகவும் பிரசாரம் செய்ய போகாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மறுப்பதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் களங்களில் பாஜகவுக்கு முழுமையான கள ஆதரவைத் தருவது ஆர்.எஸ்.எஸ்.இயக்கம்தான். பாஜக தலைவர்கள் ஒரு பக்கம் பிரசாரம், பொதுக் கூட்டம் என இயங்கினால் களத்தில் இறங்கி பாஜகவுக்கான வாக்குகளை ஒருங்கிணைப்பதில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள்தான் மிக முக்கியப் பங்கு வகிப்பது வழக்கம். பாஜகவுக்கான தேர்தல் பணிகளுக்காக சிறப்பு ஷாகாக்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டி வியூகம் வகுப்பதும் நடைமுறைதான்.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுடன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் இப்படித்தான் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய லோக்சபா தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜக- ஆர்.எஸ்.எஸ். இடையேயான மோதல் வெளிப்பட்டு நிற்கிறது. பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாதான் இப்படியான மோதலை வெளிப்படுத்தியவர். ஜேபி நட்டா இப்படி திடீரென பேசியதால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை பாஜக தடை செய்யப் போகிறது என கொளுத்திப் போட்டுவிட்டார் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச லோக்சபா தேர்தல் களம் தொடர்பான ஊடக கணிப்புகள் பாஜகவுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரக் கூடியதாக இருக்கவில்லை. பொதுமக்கள் தரப்பு, ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தியில் இருக்கிறது என ஊடகங்கள் குறிப்பிட்டு சுட்டிக்காட்டுகின்றன.
இன்னொரு பக்கம், உ.பி. மாநிலத்தில் இந்த முறை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பெரிய அளவில் பிரசாரத்துக்கு போகவே இல்லை என்கின்றன சில ஊடக தகவல்கள். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடம் பேசிய ஊடகங்கள், 7 ஆண்டுகள் உ.பி.யில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் சித்தாந்த அடிப்படையில் களப் பணியாற்றுகிற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? குறிப்பாக உ.பி.யில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைவிடப்பட்டுதான் நிற்கின்றனர். எங்களால் எங்கள் பாஜக அரசுக்கு எதிராக போராடவும் முடியாது. இந்த தேர்தலுக்காக ஒரு சிறப்பு ஷாகாவை கூட நடத்தவே இல்லை என்றால் நாங்கள் எப்படி களப் பணியில் இறங்குவது? என குமுறலை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள் கிடைக்குமா? என்பது சந்தேகம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications