நெஞ்சே பதறுது.. லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் லிப்டில் பெண்ணுடன் வந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுவனை கடிப்பதும், அதற்கு சிறுவன் அலறி துடிப்பதும் அதை கண்டும் எந்த பதற்றமும் இல்லாமல் அந்த நாயின் உரிமையாளர் நிற்கும் அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் எக்ஸ்டன்ஷனில் உள்ள சார்ம்ஸ் கவுண்டி. இது ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இங்கு லிப்டில் ஒரு சிறுவன் முதுகில் பையை மாட்டிக் கொண்டு நின்றிருக்கான்.
அப்போது வளர்ப்பு நாயின் சங்கிலியை பிடித்தபடி ஒரு பெண் நிற்கிறார். யாரோ லிப்ட்டை திறக்கிறார்கள். உள்ளே நாய் இருப்பதை கண்டு ஏறாமல் இருந்ததால் லிப்ட்டின் கதவுகள் மூடப்படுகின்றன.

சிறுவன்
அப்போது அந்த சிறுவன் சற்று கதவு அருகே செல்கிறான். அப்போது அந்த நாய், சிறுவனின் தொடையில் கடித்து விடுகிறது. இதனால் சிறுவன் வலியால் துடிக்கிறான். ஒற்றை காலை தூக்கிக் கொண்டு தத்தி தத்தி அலறுகிறான். வலி தாள முடியாமல் தொடையை தேய்த்து விடுகிறான்.

பதறாத பெண்
இத்தனை நடந்தும் அந்த பெண் சிறிதும் பதற்றம் ஏதும் கொள்ளாமல் அப்படியே நின்றுக் கொள்கிறார். சிறுவனை நாய் கடித்துவிட்டதே கடித்த இடத்தில் என்னவாயிற்று என்பதை பார்க்கலாம் என்ற எந்த துடிப்பும் இல்லாமல் நிற்கிறார். சிறுவனோ அச்சத்தால் அந்த பெண் ஏதாவது முதலுதவி செய்வார் என பார்க்கிறான். ஆனால் அவர் மிகவும் கூலாக நிற்கிறார்.

நாயை அழைத்து செல்லும் பெண்
பின்னர் தான் இறங்க வேண்டிய தளம் வந்தவுடன் நாயை அழைத்து கொண்டு இறங்குகிறார். அப்போது அந்த நாய் சிறுவனை கடிக்க முற்படுகிறது. சிறுவன் அச்சமடைந்து பின்னோக்கி ஓடுகிறான். எனினும் நாயை அடக்காமல் கேஷுவலாக செல்கிறார். உடனே லிப்டில் ஏறும் ஒருவரிடம் நாய் கடித்ததை சொல்கிறான்,. அவர் ஷாக்காகி பதறுகிறார்.

வீடியோ
இத்தனையும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த நாய் கடித்தபோது குழந்தைக்கு என்னாச்சு என பார்க்காமல் அந்த பெண் அமைதியாக நின்றதால் அவர் மீது சிறுவனின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த பெண்ணிற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications