ஞானவாபியை தொடர்ந்து புது சர்ச்சை.. முசாபர் நகரில் இக்தா மீது தாக்குதல்! உ.பியில் தொடரும் சலசலப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் தற்போது முசாபர் நகரில் உள்ள இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு தலமான இத்கா மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. காசிவிஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள இடத்தில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த மசூதியின் சுற்றுச்சுவரில் இந்து தெய்வத்தின் சிற்பம் இருப்பதாக கூறி இந்துத்துவ அமைப்புகள் சர்ச்சையில் ஈடுபட்டன. இதனையடுத்து இந்த மசூதியில் லிங்கம் போன்ற உருவம் இருப்பதாகவும் கூறி நீதிமன்றத்திற்கு சென்றன. அதன் அடிப்படையில் தற்போது இந்திய தொல்லியல் துறை மசூதியில் ஆய்வு நடத்தி வருகிறது.

இது குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "ஞானவாபி மசூதி கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே முஸ்லீம்கள் தாமாகவே முன்வந்து 'கடந்த காலத்தில் வரலாற்று ரீதியாக தவறிழைக்கப்பட்டுள்ளது. அதனைச் சரி செய்திட வேண்டும்' என்று ஒப்புக்கொள்ள வேண்டும்" என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகளின் நிர்வாகிகள் பலர், "கோயில்களை இடித்துவிட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. அதனை மீட்க வேண்டும்" என்று கிளம்பியுள்ளனர்.

இந்த சூழலில்தான் முசாபர் நகரில் சார்தவால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு தலமான இத்கா மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளது. அதன் குவிமாடம் உடைந்துள்ள நிலையில் இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். சம்பவம் குறித்து எஸ்பி சிட்டி சத்யநாராயண் பிரஜாபத் கூறுகையில், "காவல்துறையினர் இக்தாவின் குவிமாடம் சேதமடைந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.
கோயில்கள் அமைந்திருந்த இடத்தில் மசூதி, சர்ச் போன்ற பிற வழிப்பாட்டு தலங்கள் அமைந்திருப்பதற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்ட வல்லுநர்கள் 1991ம் ஆண்டுச் சட்டத்தை மேற்கோள் காட்டியுள்ளனர். அதாவது, இந்த சட்டத்தின்படி கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் போன்ற மத வழிப்பாட்டு தலங்கள் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று எந்த நிலைமையில் இருந்ததோ அதே நிலைமையில் தொடர அனுமதிக்கிறது. எனவே கோயில்கள் இருந்த இடத்தில் மசூதிகள் கட்டப்பட்டுவிட்டது என்று கூறும் புகார்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications