'கேரளா மாப்ளா கலவரம் இந்துக்கள் மீதான திட்டமிட்ட படுகொலை'.. யோகி ஆதித்யநாத் சொல்கிறார்!
லக்னோ: கேரளாவில் நடந்த மாப்ளா கலவரம் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கேராளாவின் மலபார் பகுதியில் 1921-ம் ஆண்டு உள்ளூர் நில பிரபுக்களுக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் அங்குள்ள முஸ்லிம்கள் போராட்டம் நடத்த துவங்கினார்கள். சிறியதாக ஆரம்பித்த இந்த போராட்டம் பின்னர் இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று மதச்சண்டையாக மாறியது.
அதன்பிறகு பெரும் கலவரம் மூண்டது. இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கலவரம் 'மாப்ளா கலவரம்' என்று அழைக்கப்படுகிறது. 1971-ம் ஆண்டில், கேரள அரசு இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அங்கீகரித்தது.

மாப்ளா கலவரம்
இந்த போராட்டம் தொடர்பாக இப்பேதும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாப்ளா கலவரம் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மாப்ளா கலவரம் குறித்து ஆர்எஸ்எஸ்-இணை இதழான பஞ்சஜன்யா ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

இந்துக்கள் கொன்று குவிப்பு
100 ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவின் மலபாரில் ஜிஹாதி சக்திகள் ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்று குவித்தனர். இந்த இனப்படுகொலை திட்டமிட்ட முறையில் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. 10,000 க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தாக்கப்பட்டனர். பல கோவில்கள் அழிக்கப்பட்டன.

ஒன்றிணைய வேண்டும்
இது ஆழமான பிரதிபலிப்பு மற்றும் விவாதத்தின் ஒரு சந்தர்ப்பம். ஜிஹாதி எண்ணங்களிலிருந்து ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் எப்படி விடுவிப்பது மற்றும் மலபார் இனப்படுகொலை மீண்டும் நிகழாத வகையில் ஒரு சூழலை உருவாக்குவது எப்படி? என்று நாம் சிந்திக்க வேண்டும். இதற்காக, அனைத்து இந்தியர்களும் உறுதியுடன் ஒன்றிணைய வேண்டும் .நமது வரலாற்றை சரியான நேரத்தில் புரிந்துகொள்வது இந்த நேரத்தில் மிகவும் முக்கியம்.

மறைக்க முயற்சித்தனர்
இந்த இனப்படுகொலையை மறைக்க முயற்சித்தனர். இந்துக்கள் மதம் மாற மறுத்ததால் இந்த படுகொலை நடத்தப்பட்டதா? என்று ஆராய வேண்டும். இந்த கலவரம் நில உரிமையாளர்களைப் பற்றியதாக இருந்தால், ஏன் பல பொதுவான இந்துக்கள் கொல்லப்பட்டனர்? உண்மை என்னவென்றால், இடதுசாரி மற்றும் போலி மதச்சார்பின்மை ஆகியவற்றிலிருந்து இந்த இனப்படுகொலை வரலாற்றை வேறு மாதிரி மாற்றி எழுதியுள்ளனர். இந்த முயற்சி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் கட்சிகளால் ஆதரிக்கப்பட்டது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications