லுலுமால் தொழுகைக்கு எதிர்ப்பு.. இந்து அமைப்பு போராட்டம்.. மடக்கி கைது செய்த போலீஸ்.. பரபர உபி
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோ லுலு மாலில் தொழுகை நடத்திய விவகாரத்தில் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் புதிதாக லுலு மால் ஜூலை 10ல் துவங்கப்பட்டது. அம்மாநில முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.
மொத்தம் 300 சில்லரை விற்பனை கடைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மாலுக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

தொழுகைக்கு எதிர்ப்பு
இந்நிலையில் மால் திறந்த 2 நாட்களுக்கு பிறகு ஜூலை 12ல் லுலுமாலில் சிலர் தொழுகை நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவ துவங்கியது. இதற்கு அகில பாரத் இந்து மகாசபா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மாலுக்கு இந்துக்கள் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியது. அதோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதற்கு நிர்வாகம் அனுமதி மறுத்தது.

சுந்தரகாண்டம் பாராயணம்
இந்நிலையில் தான் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே தடையை மீறி இந்து அமைப்பை சேர்ந்த சிலர் லுலுமால் அருகே சுந்தரகாண்டம் பாராயணம் செய்தனர். இதையடுத்து சரோஜ் நாத் யோகி, கிருஷ்ணகுமார் பதாக், கவுரவ் கோஸ்வாமி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம் - கைது
இந்நிலையில் இந்த நடவடிக்கைகளை கண்டித்து இன்றும் அகில பாரத இந்து மகாசபா அமைப்பை சேர்ந்தவர்கள் மால் அருகே காவிக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் இரும்பு தடுப்பு வேலிகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாலில் பிரார்த்தனைக்கு தடை
முன்னதாக, அந்த அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் சிசிர் சதுர்வேதி கூறுகையில், ‛‛மாநிலத்தில் பொது இடத்தில் தொழுகை நடத்தப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இது விதிமீறலாகும். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்'' என கூறினார். மேலுமு் மால் பொது மேலாளர் சமீர் வர்மா கூறுகையில், ‛‛லுலு மால் நிர்வாகம் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறது. மாலில் மதம்சார் பிரார்த்தனைகளுக்கு அனுமதி இல்லை. இதனை கண்காணிக்க மால் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது'' என்றார். அதோடு மதம்சார்ந்த பிரார்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மாலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் போராட்டம் தொடர்கிறது.

வழக்குப்பதிவு
மேலும் தொழுகை விஷயம் தொடர்பாக மால் நிர்வாகம் சார்பில் லக்னோ சுஷாந்த் கோல்ப் சிட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி இந்திய தண்டனை சட்டம் 153ஏ (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295ஏ (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம்) உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications