உ.பி. அத்திக் அகமது கொலையாளி லவ்லேஷ் திவாரி இந்துத்துவா தீவிரவாதி-'பஜ்ரங்தள்' இயக்க நிர்வாகி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்பியும் தாதாவுமான அத்திக் அகமதுவை சுட்டுப் படுகொலை செய்த 3 பேரில் ஒருவரான லவ்லேஷ் திவாரி, இந்துத்துவா தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான பஜ்ரங்தள் அமைப்பின் நிர்வாகி என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
உத்தரப்பிரதேச முன்னாள் எம்பியும் தாதாவுமான அத்திக் அகமது, வழக்கறிஞர் உமேஷ்பால் படுகொலை வழக்கில் சகோதரர் அஷ்ரப் அகமதுவுடன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் மகன் ஆசாத்தும் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஆசாத் சில நாட்களுக்கு முன்னர் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் பிரக்யாராஜ் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட அத்திக் அகமது, செய்தியாளர்களுக்கு பேட்டி தர அனுமதிக்கப்பட்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்த போதே அவரை நெருங்கிய சிலர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அத்திக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவருமே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். பத்திரிகையாளர்கள் போர்வையில் ஊடுருவியிருந்த 3 கொலையாளிகள் உடனடியாக மடக்கி கைது செய்யப்பட்டனவர். அவர்கள் 3 பேரும் அப்போது ஜெய்ஶ்ரீராம் என முழக்கமிட்டிருந்தனர்.
இதனிடையே அத்திக் அகமது படுகொலை சம்பவத்தால் வன்முறைகள் வெடிக்காமல் இருக்க 75 மாவட்டங்களிலும் உபியில் ஆளும் பாஜக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரக்யாராஜ் மாவட்டம் முழுவதும் இணையசேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அத்திக் அகமதுவை படுகொலை செய்த 3 பேர் விவரங்கள் வெளியாகி உள்ளன. ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 கொலை வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல் சன்னி சிங், லவ்லேஷ் திவாரி, அருண் மெளரியா ஆகியோர் கொலையாளிகள் என தெரியவந்துள்ளது. இவர்களில் லவ்லேஷ் திவாரி, பஜ்ரங்தள் எனும் இந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவர் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த மூவரைப் பற்றிய கூடுதல் விவரங்களை போலீசார் இன்னமும் வெளியிடவில்லை.

அதேநேரத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அத்திக் அகமது படுகொலை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் அவரது மகன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆகியவை உ.பி.யில் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியையையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications