‛கரணம் தப்பினால் மரணம்’.. ரயிலில் இப்படி கூட போலாமா? கூட்ட நெரிசலால் பயணிகள் எடுத்த ஆபத்தான முடிவு
லக்னோ: கூட்ட நெரிசலால் ரயிலில் ஆபத்தை உணராமல் மாற்றி யோசித்து பொதுமக்கள் பயணித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ‛‛இப்படி கூட ரயிலில் பயணம் செய்யலாமா?'' என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரயில்.. குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் போக்குவரத்து துறையாக உள்ளது. ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள், முன்பதிவு பெட்டிகள், ஏசி பெட்டிகள் என தனித்தனி வசதிகள் உள்ளன. இதனால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தங்களின் வசதிக்கு ஏற்ப ரயிலில் பயணித்து வருகின்றனர்.

இதனால் எப்போதுமே ரயில்களில் கூட்டம் என்பது இருந்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட பண்டிகை காலம், தொடர் விடுமுறை காலத்திலும் மக்களுக்கு போதிய இருக்கைகள் கிடைப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் ரயில்களில் சாதாரண பெட்டிகளில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் கூட உரிய டிக்கெட் இன்றி பயணித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது கூட்ட நெரிசல் மிக்க ரயிலில் இப்படி கூட பயணம் செய்யலாமா? என்ற வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. ஆனால் ஒரு பிரச்சனை. வீடியோவில் இருப்பது போல் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அதாவது ‛‛கரணம் தப்பினால் மரணம்'' என்பதை மனதில் வைத்தே பயணம் செய்ய வேண்டும்.
பொதுவாக ரயிலில் கூட்ட நெரிசல் இருந்தால் சாதாரண பெட்டிகளில் பயணிகள் நின்றபடி பயணிப்பதும், முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிப்பதையும் நாம் கேள்வி பட்டு இருப்போம். மேலும் வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்கள் ரயில்களின் மேல்கூரையில் ஏறி அமர்ந்து பயணிப்பதை கூட நாம் பார்த்து இருப்போம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பயணிகள் ரயிலின் இரு பெட்டிகளை இணைக்கம் கப்லரில் ஏறி நின்று பயணிக்கின்றனர்.
பீகாரில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்ற ரயிலில் பயணிகள் இப்படி ஆபத்தை உணராமல் பயணித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் மொரடாபாத் ரயில் நிலையத்தில் இந்த ரயில் சென்றபோது ஏராளமான பயணிகள் ஏறியுள்ளனர். இதனால் அனைத்து பெட்டிகளிலும் வாசல் வரை பயணிகள் தொங்கியபடி நின்றனர்.
ஆனாலும் கூட பலருக்கும் ரயிலில் ஏற முடியவில்லை. இந்த வேளையில் தான் சிலர் ரயிலில் இரு பெட்டிகளை இணைக்கும் கப்லரில் ஏறி நின்று பயணித்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை விஷால் சர்மா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் தற்போது அது வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications