போர் விமான டயர்களையே ஆட்டையை போட்ட பலே கொள்ளையர்கள்..! உத்தர பிரதேசத்தில் பரபரப்பு
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் விமானப்படை தளத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட போர் விமானத்தின் சக்கரங்களை திருடிச் சென்ற கொள்ளையர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். 403 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய சட்டப்பேரவையாக உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை உள்ளது.

உ.பி. மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இசுலாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பல நாளேடுகளிலும் அன்றாடம் விமர்சிக்கப்படுகிறது. ஆனாலும் இது பாஜகவை குறை சொல்ல வேண்டும் என்பதற்கான பொய் பிரச்சாரம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இருந்தபோதும் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றது முதல் சட்டம் ஒழுங்கை சமாளிப்பது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விமானப்படை தளத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட ராணுவத்திற்கு தேவையான பொருட்களில் போர் விமானத்தின் டயர்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பக்ஷி-கா-தலாப் விமானபடைத்தளம் அமைந்துள்ளது. இந்த விமானப்படைத்தளத்திலிருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப்படைத்தளத்திற்கு ட்ரக் ஒன்று இராணுவத்திற்குத் தேவையான பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளது. அவ்வாறு ஏற்றி செல்லப்பட்ட பொருட்களில் மிராஜ் போர் விமானத்தின் ஐந்து சக்கரங்களும் அடக்கம்.
Recommended Video
இந்தநிலையில், அந்த ட்ரக்கிலிருந்து மிராஜ் போர் விமானத்தின் டயர் ஒன்று திருடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஷஹீத் பாத் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைப் பயன்படுத்தி ஸ்கார்ப்பியோ காரில் வந்தவர்கள் டயரைத் திருடிவிட்டதாகவும், 27ஆம் தேதி நள்ளிரவு 12.30 - 1 மணிக்கிடையே இந்தத் திருட்டு நடைபெற்றததாகவும் ட்ரக்கின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, இந்த டயர் திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் விசாரித்துவருகின்றனர். இராணுவத்திற்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்திலிருந்து போர் விமானத்தின் டயர் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications