பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு என்ன? 5 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்து இருக்குன்னு பாருங்க
லக்னோ: பிரதமர் மோடி தனது வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.2.85 கோடி டெபாசிட் செய்துள்ளார். மோடியின் சொத்து மதிப்பு கடந்த 2019-ல் 2.51 கோடியாக இருந்தது. தற்போது ரூ.3.02 கோடியாக உயர்ந்துள்ளது.
வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தையும் மோடி தாக்கல் செய்துள்ளார். இதில் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

மோடியின் சொத்து மதிப்பு: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை. குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. மோடியின் பிரதான வருமானமாக அவருக்கு அளிக்கப்படும் சம்பளமே உள்ளது. மோடியிடம் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. அந்த மோதிரங்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். மோடியிடம் ரொக்கமாக ரூ.52 ஆயிரம் 920 உள்ளது. பிரதமர் மோடி தனது வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ.2.85 கோடி டெபாசிட் செய்துள்ளார்.
எவ்வளவு உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி கடந்த 1978 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளார். 1983 ஆம் ஆண்டில் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு 1.64 கோடியாக இருந்தது. 2019-ல் ரூ.2.51 கோடியாக இருந்தது. தற்போது ரூ.3.02 கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் மோடியின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் மட்டுமே உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் கடைசி கட்ட தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. வாரணாசி தொகுதியில் கடந்த முறையை போல இந்த தேர்தலிலும் மோடியே போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்மொழிந்த வேட்பாளர்கள் யார்?: வேட்பு மனு தாக்கல் செய்யும் பிரதமர் மோடி, கங்கை ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்தயநாத் ஆகியோர் அவருடன் இருந்தார். பொதுவாக வேட்புமனுவில் அந்த தொகுதியைச் சேர்ந்த 4 வேட்பாளர்கள் முன்மொழிய வேண்டும்.
வாரணாசி தொகுதி: அதன்படி பிரதமர் மோடியின் வேட்புமனுவை பண்டிட் ஞானேஸ்வர், பைஜ்நாத் படேல், லால் சந்த் குஷ்வாகா, சஞ்சய் சோங்கர் ஆகியோர் முன்மொழிந்துள்ளனர். வாரணாசி தொகுதியானது பாஜக மற்றும் பிரதமர் மோடியின் கோட்டையாகும். அவர் ஏற்கனவே 2014 மற்றும் 2019 என இரண்டு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்..
இந்த வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார். வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக அஜய் ராய் களமிறங்குவது இது மூன்றாவது முறையாகும். வாரணாசி தொகுதியில் ஜூன் 1ஆம் தேதி 7 ஆம் கட்ட பொது தேர்தல் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications