உ.பி வன்முறை.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ராகுல்காந்தி, பிரியங்கா ஆறுதல்!
லக்னோ: ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எப்போதும் துணை இருக்கும் என்று அவர்கள் நம்பிக்கை அளித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகே பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.

8 பேர் பரிதாப உயிரிழப்பு
அப்போது பாஜக தொண்டர்களும் சேர்ந்து விவசாயிகளை வெளியேற்ற முயன்றனர். அப்போது அங்கு காரில் வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் பெரும் வன்முறை மூண்டது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அனுமதி மறுப்பு
பல்வேறு தலைவர்களும், எதிர்க்கட்சிகளும் மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசம் நோக்கி சென்றபோது கைது செய்யப்பட்டார். இதேபோல் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் லக்கிம்பூர் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டார்.

கட்டுப்பாடுகள் விதிப்பு
இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உள்ளிட்டோர் லக்கிம்பூர் நோக்கி சென்றனர். பிரியங்கா காந்தியும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். லக்னோ விமான நிலையத்தில் அவர்கள் வந்தபோது எதிர்பார்ப்புக்கு மாறாக உத்தரபிரதேச அரசு அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

ராகுல் காந்தி ஆவேசம்
லக்கிம்பூர் செல்வதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, கேசி வேணுகோபால், அஜய் குமார் லல்லு, தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட குழுவினர் சொந்த வாகனத்தை பயன்படுத்த கூடாது. போலீசின் வாகனத்தில்தான் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளால் ஆத்திரம் அடைந்த ராகுல் காந்தி, எந்த சட்டத்தின்படி இப்படியான கெடுபிடிகள் விதிக்கப்படுகிறது எனவும் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆவேசம் அடைந்தார்.

ராகுல், பிரியங்கா ஆறுதல்
இதனை தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்ட குழுவினர் லக்கிம்பூர் சென்றடைந்தனர். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, கேசி வேணுகோபால், அஜய் குமார் லல்லு, தீபேந்தர் ஹூடா ஆகியோர் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மத்திய பாஜகவுக்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications