விபத்தில் சிக்கிய ராகுல் காந்தி.. 5 வாகனங்கள், ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதல்.. பலர் படுகாயம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பலர் காயமடைந்தனர். எனினும், இந்த விபத்தில் ராகுல் காந்தி பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்த இந்த விபத்தில் 5 வாகனங்களும் ஓர் ஆம்புலன்ஸும் அடுத்தடுத்து மோதியதாக தெரிகிறது.
எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இப்போது அரசியல் களத்தில் தீவிரமாக இருக்கிறார். தர்ணா, பேரணிகள் என மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராகுல் காந்தி சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சென்ற கான்வாயில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பலர் காயமடைந்தனர். எனினும், ராகுல் காந்தி பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. அங்கு 91வது கிலோமீட்டர் அருகே 5 வாகனங்களும் ஓர் ஆம்புலன்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.
என்ன நடந்தது
ராகுல் காந்தி சுல்தான்பூரில் நீதிமன்ற விசாரணைக்காக ஆஜராக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இன்று காலை தான் இந்த விசாரணைக்காக லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்துக்கு ராகுல் காந்தி சென்றடைந்தார். அவரை வரவேற்பதற்காக நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் உள்ளூர் கட்சி நிர்வாகிகளும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். அங்கிருந்து சுல்தான்பூருக்கு புறப்பட்டு சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து தொடர்பான வீடியோக்களும் இப்போது வெளியிட்டுள்ளது.
பாஜக
2018ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு, பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துகள் தொடர்பான அவதூறு வழக்கு விசாரணைக்காகவே ராகுல் காந்தி உத்தர பிரதேசம் சென்றுள்ளார். சுல்தான்பூர் உள்ளூர் பாஜக தலைவருமான விஜய் மிஸ்ரா, 2018 ஆகஸ்ட் 4ம் தேதி ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு புகார் அளித்தார். இந்த வழக்கில் 2023ம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, ஜாமீன் பெற்றார்.
இந்த வழக்கில் தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி சுல்தான்பூரில், குறிப்பாக நீதிமன்ற வளாகத்தை சுற்றி, பலத்த போலீஸ் ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
