சாட்டையை சுழற்றிய உ.பி முதல்வர்.. யோகி கைக்கு போன முக்கிய லிஸ்ட்.. கதிகலங்கும் அரசு அதிகாரிகள்..!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அரசால் தொடக்கி வைக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதில் உள்ள இடர்பாடுகளை களைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அரசு அதிகாரிகளின் வேலைகள் குறித்து 'ரேங்க்' பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் இந்த 2023ம் ஆண்டு இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது. காரணம் வளர்ந்த நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலைதான். இனி ஓர் ஆண்டுக்கு உலகத்தின் வளர்ச்சி ஆசிய நாடுகளை நம்பிதான் இருக்கிறது. குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவை நம்பிதான் இருக்கிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தியா தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயன்று வருகிறது.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசமும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநிலத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தன்னை உயர்த்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, வேலை வாய்ப்பு என 10 துறைகளில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விரைவில் துறை சார்ந்த அதிகாரிகள் ஒரு விரிவான ரிப்போர்ட்டை தயாரித்து முதலமைச்சரிடம் கொடுப்பார்கள்.
அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முலீட்டாளர்கள் மூலம் ரூ.34 லட்சம் கோடி வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வேலை வாய்ப்பை அதிகரித்து உ.பியின் வருவாயை பெருக்கும். அதேபோல சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மற்றொரு நிகழ்வும் இடம் பிடித்துள்ளது. அதாவது, உ.பி முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதுவரை இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்ததில்லை.
எனவே யோகி ஆதித்யநாத் ஆட்சியின் 6 ஆண்டுகள் நிறைவு விழாவை பாஜக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே முடிவுற்ற திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில மாவட்டங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். மறுபுறம் சட்டம் ஒழுங்கை காப்பதிலும் காவல் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக தொடர் புகார்கள் எழுந்திருக்கிறது. எனவே இந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தற்போது யோகி ஆதித்யநாத் அரசு முடிவெடுத்திருக்கிறது.
இது குறித்து இன்று விளக்கியுள்ள யோகி ஆதித்யநாத், "மக்கள் குறைகளை சரி செய்யாத அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சாதாரண போலீஸ் ஸ்டேஷன் காவலர் தொடங்கி அரசின் உயர் மட்ட அதிகாரிகள் வரை இந்த தவறை செய்துள்ளார்கள். இவர்களுக்கு ஏற்கெனவே பல முறை வார்ணிங் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார். இது அம்மாநில அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications