வேற லெவலில் மாறும் அரசு பள்ளிகள்.. முழு கவனமும் மாணவர்கள் மீதுதான்.. முதல்வர் யோகியின் அடுத்த அதிரடி
அரசு பள்ளிகளை மேம்படுத்த உத்தரப் பிரதேச பாஜக அரசு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.2,000 கோடியை அம்மாநில பாஜக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 2023-2024ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகள் அளவுக்கு உயரும் என்று மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதியை ஒதுக்கியிருந்தது. தேசிய அளவில் இந்த மாநிலத்தில்தான் அதிக நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. அதேபோல அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் தொடங்குகிறது. எனவே இந்த தேர்தலில் கணிசமான வெற்றியை பதிவு செய்யவே இந்த பட்ஜெட்டிற்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இடந்த பட்ஜெட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 880 அரசு தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளை மேம்படுத்த முதற் கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4,000 அபியுதயா கூட்டுப் பள்ளிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதற்கான திட்டங்களையும் பள்ளிக்கல்வித்துறை தயாரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு தரமான கல்வியை உறுதி செய்யும். அதேபோல சர்வதேச அளவில் மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் இந்த திட்டம் உதவும் என ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து உத்தரப் பிரதேச பள்ளிக் கல்வி இயக்குநர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் கூறுகையில், "ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சுமார் ரூ.1.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிஜமாகவே மிகப்பெரிய தொகையாகும். அதேபோல 704 பள்ளிகள் அடுத்தக்கட்டத்திற்கு தரம் உயர்த்தப்படுகின்றன.

தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளதுபடி குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது. ஆனால் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் ஒவ்வொரு நடுநிலை பள்ளிகளிலும் சுமார் 450 மாணவர்கள் பயிலும் அளவுக்கு பள்ளிகள் மேம்படுத்தப்படும். சத்துணவுத் தோட்டம், வைஃபை & ஆன்லைன் சிசிடிவி கண்காணிப்பு, விளையாட்டு மைதானத்துடன் கூடிய பல செயல்பாட்டுக் கூடம் மற்றும் நவீன தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
இது தவிர உயர்கல்வியிலும் உத்தரப் பிரதேச அரசு சில முன்னெடுப்புகளை மேம்படுத்தியுள்ளது. அதன்படி, மாவட்டம்தோறும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க இருக்கிறது. தற்போது இரண்டு மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி என்கிற வகையில்தான் இருக்கிறது. எனவே இந்நிலையை மாற்ற மாவட்டத்திற்கு ஒரு அரசு கல்லூரியை அமைக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications