அதிர்ச்சியில் உறைந்த உத்தர பிரதேசம்.. 2 சிறுவர்கள் படுகொலை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்தது போலீஸ்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 2 சிறுவர்கள் கொடூரமாக கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி சஜித் கான் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
உத்திர பிரதேசத்தின் படவுன் மாவட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் கடன் கேட்டு கொடுக்க மறுத்த நபரின் இரண்டு குழந்தைகள் கொடூரமாக கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

உத்தர பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் சாய்பாபா காலனியில் பார்பர் ஷாப் ஒன்றை சஜித் கான் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு அருகே வசித்து வந்த வினோத் என்பவருடன் நட்பாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. வினோத் தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சஜித் கான் பார்பர் ஷாப் கடை அருகேதான் வசித்து வருகிறார்.
இரட்டை கொலை: இந்தநிலையில் நேற்று, சஜித் தான், வினோத்திடம் 5 ஆயிரம் பணம் கேட்டு இருக்கிறார். ஆனால், வினோத் மறுத்ததால் இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு இருகிறது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த சஜித் கான், வினோத் வீட்டின் இரண்டாவது தளம் சென்று அங்கு விளையாடிக்கொண்டு இருந்த வினோத்தின் பிள்ளைகளான ஆயூஷ் (வயது 11), ஆஹான் (7), பியூஷ் (6) ஆகிய சிறுவர்களையும் தன்னிடம் இருந்த கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயெ ஆயுஷ் மற்றும் ஆஹான் இருவரும் உயிரிழந்தனர். பியூஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினான். உத்தர பிரதேச மாநிலத்தையே இந்த இரட்டைக்கொலை சம்பவம் அதிர வைத்துள்ளது. இரண்டு சிறுவர்களை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சஜித்கானை போலீசார் சுற்றி வளைத்தனர்.
குற்றவாளி சுட்டுக்கொலை: ஆனால், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சஜித் கான் உயிரிழந்தார். என்கவுண்டரில் கொல்லப்பட்ட சஜித்கானுக்கும், படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களின் தந்தையான வினோத்திற்கும் ஏற்கனவே முன்பகை இருந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் இந்த இரட்டைக்கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் மக்கள் கூறியதாவது: இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறியதாவது:-
வினோத்குமார் குடும்பத்தினருக்கும் சஜித்கானுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. வினோத்குமார் மனைவி சலூன் ஒன்றை நடத்தி வருகிறார். வினோத் குமார் மனைவி வீட்டில் தனது மூன்று பிள்ளைகளுடன் இருந்த போது, வீட்டிற்குள் புகுந்த சஜித் கான், அவரது மனைவியிடம் டீ போட்டு தருமாறு கேட்டு இருக்கிறார்.
கழுத்தை அறுத்தார்; அப்போது வினோத்குமார் மனைவி டீ போடுவதற்காக கிச்சன் சென்று இருக்கிறார். மேல் தளத்தில் வினோத்தின் பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பதை அறிந்த சஜித் கான், அங்கு சென்று மூன்று பேரையும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்த போது, சஜித் கான் தப்பி ஓடிவிட்டான்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்: 2 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவன் காயத்துடன் உயிர் தப்பினான். சம்பவம் அறிந்து போலீசாரும் உடனடியாக வந்து விசாரணையை தொடங்கினர்" என்றனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தை அதிர வைத்துள்ளது. உயிரிழந்த சிறுவர்களின் உடலை எடுக்க விடாமல் அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications