பிராமணர் என்பது ஜாதியில்லை.. உயர்ந்த வாழ்க்கை முறை.. உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிராமண சமூகத்தினரே பாஜக மீது, குறிப்பாக யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிராமணர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக தலைவர்களின் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில நாட்களில் முதற்கட்ட தேர்தல் தொடங்க உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு தற்போது ஆட்சியில் உள்ள பாஜக எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதனால் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தங்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிருப்தி
உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்களின் வாக்கு கணிசமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே பிராமணர்கள் கருதுகின்றனர். யோகி ஆட்சியில் தாகூர் சமூகத்தினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகப் பரவலாகக் கூறப்படுகிறது. இதனால் அங்குப் பிராமண சமூகத்தினரே பாஜக மீதும் குறிப்பாக யோகி ஆதித்யநாத் மீதும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

உயர்ந்த வாழ்க்கை முறை
இதையடுத்து பிராமணர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக தலைவர்களின் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள கெளதம் புத் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, எதிர்க்கட்சிகள் சாதி வெறியுடன் செயல்பட்டு வருகிறது என்று சாடினார். மேலும், பிராமணர் என்பது சாதியல்ல என்றும் அது ஒரு உயர்ந்த வாழ்க்கை முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக எந்த பாகுபாடுமின்றி அனைவருக்கும் பாடுபடுகிறது என்றார்.

துணை முதல்வர்
இது தொடர்பாக அவர் பேசுகையில், "உ.பி தேர்தலுக்காக நான் மாநிலம் முழுவதும் செல்கிறேன். என்னிடம் பலரும் பிராமணியம் மற்றும் சாதிவெறி குறித்த பாஜகவின் நிலைப்பாடு குறித்தே பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது வெறும் பிராமணர் அல்லது குஜராத் அல்லது ஜாட்களின் அரசு இல்லை. நமது அமைச்சரவையில் அனைத்து சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

பிராமணர்கள் கடவுள்கள்
இது அனைவருக்குமான அரசு. ஒவ்வொரு சாதிக்கும் அதன் முக்கியத்துவம் உண்டு. அதை நாம் மதிக்க வேண்டும். நான் ஒரு பிராமணன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் அதை அவமரியாதையாகப் பார்க்கவில்லை. மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காண்பவரே பிராமணர்கள். நான் தொழில்முறையில் ஒரு ஆசிரியர். முன்பு எல்லாம் பிற மக்கள் நலனுக்காக பணியாற்றும் ஆசிரியர்களை மட்டுமே பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். மரியாதை நிமித்தமாகச் சாதிகள் கடந்து அவர்கள் கடவுளாகக் கருதப்படுகிறார்கள்.

உயர்ந்த வாழ்க்கை முறை
அப்படியானால், இந்த ஜாதி எங்கிருந்து வந்தது? சொல்லப்போனால் பிராமணர் என்பது சாதியல்ல, உயர்ந்த வாழ்க்கை முறையைத் தான் பிராமணன் என்பார்கள். அவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதற்கும் சாதிக்கும் தொடர்பு இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை பிராமணர்கள் மற்றவர்களுக்காக வேலை செய்கிறார்கள். பாஜக அரசு அனைத்து தரப்பினரின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.

இஸ்லாமியர்கள் ஆதரவு
இன்னும் சொல்லப்போனால், நான் மாநிலத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் மத்தியிலும் பேசி வருகிறேன். இஸ்லாமியர்கள் மத்தியிலும் பாஜகவுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது" என்றார். உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்.10 தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், எப்போதும் பாஜகவுக்காகவே வாக்களிக்கும் பிராமணர்களின் வாக்கு இந்த முறையும் சிதறிவிடக் கூடாது என்பதில் பாஜக கவனமாக உள்ளது.












Click it and Unblock the Notifications