'புல்டோசர் பாபா' - பெயர் வைத்த அகிலேஷ் யாதவ்.. புல்டோசரை நிறுத்தி அதிரடி காட்டிய யோகி ஆதித்யநாத்!
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தின் போது நான்கு புல்டோசரை நிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன.
ஆட்சியில் இருக்கும் பாஜகவை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், மீதமுள்ள மூன்று கட்ட தேர்தல்களில் வெற்றி பெற கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறது பாஜக.

பாஜக
உத்தரப்பிரதேசத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2017ல் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடந்த தேர்தலில் காணாமலே போனது. எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என சமாஜ்வாதி கட்சி பிரசாரம் செய்து வருகிறது.

யோகி ஆதித்யநாத்
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று நடந்த பிரசாரத்தின்போது ''பகுஜன் சமாஜ்வாடி கட்சி யானை சின்னத்தை வைத்துள்ளது. அவர்கள் அந்த யானையை போல் ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேசன் பொருட்களை விழுங்குபவர்கள். சமாஜ்வாடி கட்சிக்கு சைக்கிள் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சைக்கிள்களை எளிதில் பஞ்சர் ஆக்கிவிடலாம்.

புல்டோசர்
இவர்களை போன்றவர்களுக்காகவே நாங்கள் புல்டோசர் இயந்திரங்களை வைத்துள்ளோம். இந்த புல்டோசர்களை பயன்படுத்தி கட்டிடங்களை கட்டலாம் , அதேசமயம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோரின் கரங்களை ஒடுக்கலாம்" என்று ஆவேசமாக கூறினார். இதையடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் யோகி ஆதித்யநாத்தை 'புல்டோசர் பாபா' என பெயர் வைத்து அழைத்தார்.

பிரசாரத்தில் புல்டோசர்
இந்நிலையில் இன்று மாலை சுல்தான்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்ள யோகி ஆதித்யநாத் வருகிறார். அதனால் அப்பகுதி பாஜகவினர் 4 புல்டோசர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.புல்டோசரின் மேல், யோகியின் படமும் ஒட்டப்பட்டிருக்கிறது. அதில், பாபாவின் புல்டோசர்கள் என்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் புல்டோசர் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பகிரப்படுகிறது. '10ம் தேதி இது பயன்படும்'' என்றும் சிலர் புல்டோசர் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

சுல்தான்பூர்
உத்தரப்பிரதேச சுல்தான்பூரில் காக்தா பஜார் எனும் இடத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். மிகப்பெரிய அளவில் இந்த பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2 கிலோ மீட்டர் தூரம் மக்கள் நின்று இந்த பிரசாரத்தைக் கண்டார்கள். அப்போது, 'இங்கு நான்கு புல்டோசர் இருக்கிறது, அதேநேரம் இந்த பகுதியில் ஐந்து தொகுதிகள் இருக்கிறது. இந்த நான்கு புல்டோசர்களையும் ஓவ்வொரு தொகுதிக்கும் அனுப்பிவிட்டால், எல்லாம் தானாக சரியாகிவிடும்'' என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications