ஏன் என் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலை? பாஜக மீது உ.பி. கூட்டணி கட்சி தலைவர் பாய்ச்சல்
லக்னோ: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தம் மகனுக்கு இடம் கொடுக்காததால் உத்தரப்பிரதேச கூட்டணி கட்சியான நிஷாத் கட்சி தலைவர் சஞ்சய் நிஷாத் பாஜக மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 36 புதுமுகங்கள் இடம்பெற்றிருந்தனர்.
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசத்துக்கு மேலும் 7 அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டன. இதில் பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான அப்னா தள் தலைவர் அனுபிரியா படேலும் ஒருவர்.

பாஜக மீது அதிருப்தி
இந்த நிலையில் தம் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்த மற்றொரு பாஜக கூட்டணி கட்சியான நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் கடும் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக சஞ்சய் நிஷாத் கூறியதாவது: மத்திய அமைச்சர் பதவியை அப்னா தள் கட்சிக்கு கொடுக்கும் போது எங்களுக்கு ஏன் தரவில்லை?

அப்னா தள்- என்ன செல்வாக்கு?
அப்னா தள் கட்சியின் அனுப்பிரியா பட்டேலுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது என் மகனும் லோக்சபா எம்.பி.யுமான பிரவீனுக்கு ஏன் அமைச்சர் பதவி தரக் கூடாது? இத்தனைக்கும் அப்னா தள் கட்சிக்கு செல்வாக்கு என்பதே சில சட்டசபை தொகுதிகளில்தான் இருக்கிறது.

பாஜக மீது நம்பிக்கை
ஆனால் எங்களது நிஷாத் கட்சிக்கு 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. எங்களுடைய அதிருப்தியை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரியப்படுத்தி இருக்கிறோம். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். என் மகன் பிரவீன் நிஷாத் தொடர்பாக பாஜக தலைவர்கள் கவனத்தில் வைத்து கொள்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு சஞ்சய் நிஷாத்.கூறினார்.

பாஜக கோட்டை கோரக்பூர்
உ.பி.யின் கோரக்பூர் லோக்சபா தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்தது. உ.பி. முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதி இது. 5 முறை யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்.பி.யானார். 2017-ல் யோகி, உ.பி. முதல்வரானதால் கோரக்பூர் லோக்சபா தொகுதிக்கு 2018-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது.

பாஜகவுக்கு அதிர்ச்சி தோல்வி
2018 இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக சஞ்சய் நிஷாத் மகன் பிரவீன் நிஷாத் போட்டியிட்டார். அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவளித்தது. அத்தேர்தலில் பிரவீன் நிஷாத் வெற்றி பெற்று பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 2019 லோக்சபா தேர்தலில் சந்த்கபீர் நகர் தொகுதியில் போட்டியிட்டு பிரவீன் நிஷாத் வெற்றி பெற்றார். சட்டசபையிலும் நிஷாத் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நிஷாத் கட்சி இணைந்தது.

துணை முதல்வர் பதவி
அதேபோல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தங்களது நிஷாத் கட்சிக்கு 100 இடங்கள், துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாஜகவுக்கு இடைவிடாமல் நெருக்கடி கொடுத்து வருகிறார் சஞ்சய் நிஷாத். இந்த நிலையில் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார் சஞ்சய் நிஷாத்.












Click it and Unblock the Notifications