உபி தேர்தல்.. முஸ்லீம் பெண்களின் வாக்குகள் குறி.. நேரடியாக களமிறங்கும் ஆர்எஸ்எஸ்.. மாஸ்டர் பிளான்!!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.
இன்னும் சில மாதங்களில் உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.

பணிகள் தீவிரம்
தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில் அனைத்து கட்சிகளும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப் பிரதேசத்திற்கு பாஜக கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

ஏன் முக்கியம்
ஏனென்றால் பிரதமர் மோடி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாராணசி உத்தரப் பிரதேசத்தில் தான் உள்ளது. இதை இமேஜ் விஷயமாகவும் பாஜக தலைமை கருதுகிறது. மொத்தம் 80 எம்பிகளை மக்களவைக்கு அனுப்புவதால் 2024 தேர்தலுக்கும் சேர்த்தே பாஜக திட்டம் போடுகிறது. 2024 தேர்தலை ஆளும் கட்சியாக இருந்து சந்திக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். இதனால்தான் கடந்த சில வாரங்களாகப் பிரதமர் மோடியே உத்தரப் பிரதேசத்தில் பல முக்கிய திட்டங்களை நேரடியாகத் தொடங்கி வைத்து வருகிறார்.

யோகி ஆத்தியநாத்
கடந்த ஆண்டு வரை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது மக்கள் எதிர்ப்பு இல்லாமலேயே இருந்தது. ஆனால் கொரோனா 2ஆம் அலை இந்த நிலைமையை மாற்றியது. 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் கொரோனா சடலங்களைக் கங்கை ஆற்றில் தூக்கிப் போடும் அவல சூழல் கூட அங்கு ஏற்பட்டது. கங்கை நதியில் சடலங்கள் மிதந்து சென்ற படங்கள் இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கொரோனா 2ஆம் அலையை மோசமாகக் கையாண்டது யோகி ஆதித்யநாத் மீது மக்கள் எதிர்ப்பை கிளப்பியது.

ஆர்எஸ்எஸ்
இதை தாண்டி தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதனால் பல்வேறு நடவடிக்கைகளை பாஜக - ஆர்எஸ்எஸ் எடுத்து வருகிறது. இந்நிலையில், உ.பி-இல் உள்ள இஸ்லாமியப் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டம் ஒன்றை ஆர்எஸ்எஸ் கையில் எடுத்துள்ளது. இஸ்லாமியப் பெண்களின் நலனைக் காக்க பாஜக எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரிக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய ஆர்எஸ்எஸ் முஸ்லிம் பிரிவு திட்டமிட்டுள்ளது.

புதிய திட்டம்
அதன்படி தேர்தலுக்கு முன்பு சிறுபான்மை மக்களுடன் குறைந்தது 50 மீட்டிங்களை நடத்த முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்ஆர்எம்) முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக எம்ஆர்எம் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஷாஹித் சயீத் கூறுகையில், "முத்தலாக் ரத்து, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக அதிகரிப்பது என பாஜக அரசு முஸ்லிம் பெண்கள் நலனைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல சிறுபான்மை சமூகத்தினரின் நலனை மேம்படுத்தவும் நரேந்திர மோடி - யோகி ஆதித்யநாத் அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

வீடுவீடாக
இதை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அடுத்த 70 நாட்களில் மாநிலம் முழுவதும் குறைந்தது 50 கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு பாஜகவின் திட்டங்கள் சென்றடைய வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம். இந்திரேஷ் குமாரின் (மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர்) தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் எங்கள் மகளிர் பிரிவு இத்திட்டத்தைச் செயல்படுத்தும். ஏற்கனவே அயோத்தி, அம்ரோஹாவில் இதுபோன்ற கூட்டங்களை நடத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

பலன் தருமா
அடுத்தாண்டு உபி தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமாஜ்வாடி கட்சிக்கு பல்வேறு முறைகளில் நெருக்கடி கொடுக்க பாஜக முயன்று வருகிறது. இந்நிலையில், இப்போது அங்குள்ள முஸ்லீம் பெண் வாக்காளர்களிடம் சென்றடைய ஆர்எஸ்எஸ் நேரடியாகத் தனது மேற்பார்வையில் இந்தத் திட்டத்தைப் போட்டுள்ளது. இத்திட்டம் பலன் தருமா என்பது நமக்கு சில மாதங்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications