பெண் பிள்ளைகளுக்கு வீடு தேடி வரும் நிதியுதவி.. கலக்கும் உபி அரசு.. அசத்தலான 'கன்யா சுமங்கலா' திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் பெண் பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 தவணைகளில் இந்த தொகை வழங்கப்படும்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பெண் பிள்ளைகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் 'கன்யா சுமங்கலா' என்ற திட்டத்தை உத்தரபிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தவணை முறையில் நிதி வழங்கும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1,053 கோடி நிதியை நடப்பாண்டு பட்ஜெட்டில் உ.பி. அரசு ஒதுக்கியுள்ளது.
பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் வரை இந்த நிதியுதவி பெண் பிள்ளைகளுக்கு கிடைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பெண் சிசுக்கள்
ஒருகாலத்தில், இந்தியாவில் பெண் சிசுக்கொலை என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தது. ஆண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்றும், பெண் குழந்தை பிறந்தால் தரித்திரம் எனவும் கூறும் பிற்போக்கு சமூகமாக இருந்த காலக்கட்டம் அது. பெண் குழந்தைகள் என்றாலே செலவு மட்டும்தான்.. அவர்களால் பெற்றோருக்கு எந்த லாபமும் கிடைக்காது என்ற சுயநல பிற்போக்கு எண்ணமே ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளது. ஆனால், கால மாற்றம் தந்த படிப்பினைகளாலும், அரசாங்கம் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களாலும் பெண் சிசுக்கொலை 96 சதவீதம் குறைந்திருக்கிறது.

படிக்க அனுப்பாத பெற்றோர்
இருந்தபோதிலும், பெண் குழந்தைகளை படிக்க வைக்க இன்றைய காலக்கட்டத்திலும் சில பெற்றோர்கள் தயாராக இல்லை. அவர்களை வீட்டு வேலைகளை பார்க்க வைத்து பின்னர் திருமணம் செய்துகொடுக்கும் பழக்கம் சில மாநிலங்களில் காணப்படுகிறது. தென் மாநிலங்களில் இந்த நடைமுறை மிக மிகக் குறைவு. ஆனால், உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா, ராஜஸ்தான், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இதை பரவலாக பார்க்க முடிகிறது. இதனால் பெண் பிள்ளைகளின் பள்ளி இடைநிற்றல் அங்கு கணிசமான அளவில் உள்ளது.

ரூ.15 ஆயிரம் நிதியுதவி
இதனைக் கருத்தில்கொண்டுதான் உத்தரபிரதேச அரசு தற்போது ஒரு அசத்தலான திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. உத்தரபிரதேச சட்டப்பேரவையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த பட்ஜெட் தாக்கலின் போது இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 'கன்யா சுமங்கலா' என்ற பெயரிலான இந்தத் திட்டத்திற்கு நடப்பாண்டு மட்டும் ரூ.1,053 கோடியை உபி அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண் பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 தவணைகளில் இந்த தொகை வழங்கப்படும்.

என்னென்ன தகுதிகள்?
இந்தத் திட்டத்தின் கீழ் இணைய விரும்பும் குடும்பம் கட்டாயம் உத்தரபிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவையாக இருக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். தத்தெடுக்கப்பட்ட பெண் குழந்தைகளும் இந்த திட்டத்தில் இணையலாம். ஒருவேளை, ஒரு குடும்பத்தில் இரட்டை பெண் குழந்தைகளாக இருந்து, மூன்றாவது பெண் குழந்தையாக இருந்தால் அவர்களும் இந்த 'கன்யா சுமங்கலா' திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியன்றும், அதற்கு பின்னர் பிறந்த பெண் குழந்தைகளும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

பிறப்பு முதல் பட்டப்படிப்பு வரை
பெண் குழந்தை பிறந்த உடனேயே அதன் பெற்றோருக்கு ரூ.2000 வழங்கப்படும். முதல் பிறந்தநாள் முடிந்து தடுப்பூசி செலுத்திய பிறகு அவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். பின்னர் குழந்தையை பள்ளியின் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் போது அவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும். ஆறாம் வகுப்பில் சேர்க்கும் போது ரூ.2000-ம், 9-ம் வகுப்புக்கு செல்லும் போது ரூ.3000-ம் வழங்கப்படும். அதன் பின்னர், அப்பெண் 10 அல்லது 12-ம் வகுப்பை முடித்துவிட்டு பட்டப்படிப்பிலோ அல்லது டிப்ளமோ படிப்பிலும் சேரும் போது அவர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும். இந்த நிதியானது நேரடியாக சம்பந்தப்பட்ட பயனாளரின் வங்கிக்கணக்கிலேயே செலுத்தப்பட்டுவிடும். இவ்வாறு நிதியுதவி கிடைப்பதால் ஏழைகளும் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப ஆர்வம் காட்டுவார்கள். தொலைநோக்கு பார்வையுடன் உ.பி. அரசு கொண்டு வந்த இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications