இதுதப்பு.. பிரதமர் மோடி, பெண் ஐஏஎஸ் அதிகாரி பற்றி அவதூறு.. உத்தர பிரதேச போலீஸ்காரர் சஸ்பெண்ட்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி பற்றி அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறி போலீஸ்காரர் ஒருவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Recommended Video
சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ்நாடு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் திறமையாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலத்திலும் பதக்கங்கள் வழங்க போலீஸ்காரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

டுவிட்டரில் பதிவிட்ட போலீஸ்காரர்
இதுதொடர்பாக கான்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அம்மாநில டிஜிபியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து குளறுபடி சரிசெய்யப்பட்டது. இதற்கிடையே தான் பதக்க பட்டியல் தொடர்பான விஷயத்தில் கான்பூர் நகர குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் அஜய் குப்தா டுவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை செய்தார்.

மோடி பற்றி அவதூறு
அதில் பிரதமர் நரேந்திர மோடி, பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் பற்றி அவர் விமர்சனம் செய்திருந்தார். இந்த டுவிட்டர் பதிவுகள் இணையதளத்தில் வேகமாக பரவின. இதற்கு ஏராளமானவர்கள் ஆதரவாகவும், எதிராகவும் பதில்களை பதிவிட்டனர். இதனால் இது சர்ச்சையாகி விவாதப்பொருளானது.

சஸ்பெண்ட் நடவடிக்கை
மேலும் போலீஸ்காரர் அஜய் குப்தா விதிகளை மீறி அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரதமர் மோடி, பெண் ஐஏஎஸ் ஆகியோர் பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் போலீஸ்காரர் அஜய் குப்தா டுவிட்டரில் பதிவுகள் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

துறை ரீதியான நடவடிக்கை
இதுபற்றி போலீஸ் கமிஷனர் பி.பி.ஜோக்தந்த் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்ட போலீஸ்காரர் சமூக வலைதளங்களில் தனது வரம்பை மீறி பதிவுகள் செய்துள்ளார். இது போலீஸ் பணியில் இருக்கும் நபரின் நடத்தைகளை விதிமீறும் வகையில் உள்ளது. இதனையடுத்து விசாரணை நடத்தி சஸ்பெண்ட் செய்துள்ளோம். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications