உ.பியில் காதலியை துண்டு துண்டாக்கிய காதலன்.. போலீசிடம் காட்டிய 'தௌலத்'.. அடுத்து நடந்த "சம்பவம்"
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் 6 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் கைதான நபர் போலீசிடமிருந்து தப்பிக்க துப்பாக்கியை பயன்படுத்திய நிலையில் பதிலுக்கு காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர்.
இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
டெல்லியில் 'லிவிங் இன்' உறவுமுறையில் தன்னுடன் மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள சொன்னபோது அதற்கு மறுப்பு தெரிவித்து அப்பெண்ணை 35 துண்டுகளாக உடன் வாழ்ந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த அதிர்ச்சியின் அலைகள் குறைவதற்குள் இதேபோல மற்றொரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் 6 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில்
இந்த கொலை சம்பவம் மாநிலத்தின் அசம்கர் பகுதியில் அரங்கேறியுள்ளது. இந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. ஆனால் இது கைவிடப்பட்ட கிணறு என்பதால் யாரும் இப்பகுதிக்கு செல்லவில்லை இதனையடுத்து சிலர் கிணற்றை எட்டி பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அதாவது கிணற்றில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மிதந்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடல் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல் இளம்பெண்ணின் உடல் என்றும் ஆனால் உடலின் சில பாகங்கள் வெட்டப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

திருமணம்
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் அசம்கர் மாவட்டத்தின் 'இஷாக் பூர்' கிராமத்தில் வசித்து வந்த 'யாதவ்' என்பவர்தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "இஷாக் பூர் கிராமத்தில் வசித்து வந்தவர்தான் யாதவ். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த இளம் பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் அந்த பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத யாதவ் பெரும் கோபமடைந்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணை தொடர்பு கொண்டு சண்டையிட்டுள்ளார்.

6 துண்டுகள்
ஒரு நாள் இது குறித்து சமாதானம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணை கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது போகும் வழியில் 'பஸ்சிமி' கிராமத்தில் இருந்த கரும்பு தோட்டத்தில் வைத்து அப்பெண்ணை யாதவ் மற்றும் சர்வேஷ் என இருவரும் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அப்பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். தலை, கை, கால்கள் என 6 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டுள்ளது. பின்னர் அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் உடலின் முக்கிய பகுதியை வீசியெறிந்துள்ளனர். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள குளத்தில் தலையும், மற்ற பகுதிகளில் இதர பாகங்களையும் வீசியெறிந்துள்ளனர்.

உதவி
இந்த சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்திருக்கிறது. அன்று இரவு தனது மகள் வீடு திரும்பவில்லையென்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்படிதான் நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். மகள் கடைசியாக யாதவ் உடன் சென்றிருப்பதை சிலர் பார்த்திருக்கிறார்கள். இதனையடுத்து யாதவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும், இந்த கொலைக்கு யாதவின் பெற்றோர்கள், சகோதரி, தாய் மாமன், சித்தி, சித்தப்பா என பலரும் உதவியுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

என்கவுண்டர்
கடந்த 15ம் தேதி யாதவ் கைது செய்யப்பட்ட நிலையில் துண்டுகளாக வெட்டிய உடலை அடையாளம் காண பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இம்மாதிரி ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு முயன்றார். நாங்கள் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக விசாரணையை அவர் திசை திருப்ப முயற்சிக்கிறார். ஆனால் நாங்கள் முழு உண்மையையும் கண்டறிவோம். தலைமறைவாக இருப்பவர்களையும் விரைவில் கண்டுபிடிப்போம்" என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் இம்மாதிரியான சம்பவங்கள் நடந்திருப்பது பெண்களுக்கு எதிரான பாதுகாப்பை கேள்வியெழுப்புவதாக இருப்பதாக மகளிர் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.












Click it and Unblock the Notifications