"சீரியல் கில்லர்!" 13 மாதங்களில் 8 பெண்கள் கொலை.. அதுவும் ஒரே மாதிரி! நம் நாட்டில் தான் இந்த கொடூரம்
லக்னோ: சினிமாக்களில் தான் நாம் சீரியல் கில்லர் குறித்துப் பார்த்து இருப்போம். ஆனால், இப்போது இந்தியாவிலேயே சீரியல் கில்லர் ஒருவன் 13 மாதங்களில் 9 பெண்களைக் கொலை செய்துள்ளான். கொலையாளியைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், கொலையாளியைப் பிடிப்பதில் மிகப் பெரிய சவால் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக நாம் சினிமாக்களில் தான் சீரியல் கில்லர்கள் குறித்துப் பார்த்து இருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அதுவும் நமது நாட்டில் சீரியல் கில்லர்களை பார்ப்பது எல்லாம் ரொம்பவே அரிதானது.

இந்த சீரியல் கில்லர்கள் குறிப்பிட்ட பாணியில் தொடர்ந்து கொலை செய்து வருவார்கள். அப்படி தான் இப்போது நமது நாட்டிலும் ஒரு சீரியல் கில்லர் கடந்த 13 மாதங்களில் 9 பேரைக் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
சீரியல் கில்லர்: உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி என்ற பகுதியில் தான் இது நடந்துள்ளது. அங்கே கடந்த 13 மாதங்களில் ஒரே வயதுடைய ஒன்பது பெண்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த சீரியல் கில்லர் குறித்த அச்சம் அங்கே அதிகரித்துள்ளது.. இந்த சீரியல் கில்லர் பெண்கள் அனைவரையும் கழுத்தை நெரித்துக் கொன்று இருக்கிறான். அதுவும் அவர்களின் சேலையிலேயே கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான்.
அங்குள்ள ஷாஹி, ஷீஷ்கர் மற்றும் ஷெர்கர் பகுதிகளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் 40-65 வயதுக்குட்பட்ட 9 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பெண்களின் சடலங்கள் எல்லாமே கரும்பு வயல்களில் ஆடைகள் களைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரம் அந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என்றே மருத்துவ அறிக்கைகள் காட்டுகின்றன.
9 கொலைகள்: கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்தடுத்து மூன்று கொலைகளும், ஜூலை ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா ஒரு கொலையும், நவம்பரில் இரண்டு கொலைகளும் நடந்துள்ளன. அதன் பிறகு எந்தவொரு கொலையும் நடக்காத நிலையில், மீண்டும் கடந்த மாதம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடர் கொலைகளால் அங்கே மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த தொடர் கொலைகளுக்குப் பின்னர், கொலையாளியைப் பிடிக்க 300 காவலர்களைக் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் 14 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அப்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
மக்கள் அச்சம்: அதன்பிறகு கொலைகள் நடக்கவில்லை என்றாலும், கொலையாளி பிடிக்காதது அங்கு உள்ளூர்வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் யார் செய்கிறார்கள்.. இதன் பின்னணி யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த கொலைகள் அனைத்தும் கிராமப் பகுதிகளில் நடந்துள்ளதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் கொலையாளியைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அங்கு உள்ளூர்வாசிகளிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், மூன்று சந்தேக நபர்களின் ஸ்கெட்ச்களை வெளியிட்டுள்ளனர். இதில் இருக்கும் நபர்களை பார்த்தால உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீசார் சொல்வது என்ன: இது குறித்து அப்பகுதி போலீசார் கூறுகையில், "கொலையாளியைக் கண்டுபிடிக்கச் சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளோம் இதற்கு முன்பும் இதுபோன்ற சில கொலைகள் நடந்துள்ளன. அவற்றை எல்லாம் ஒரே நபர் செய்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். ரோந்து பணிகளைத் தீவிரமாக்கி இருக்கிறோம். மேலும், சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகிறோம். கொலையாளியை விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்துவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications