ஒரேயொரு செயலியில் 3,500 சேவைகள்.. வியக்க வைக்கும் உத்தர பிரதேச அரசு.. இதுதான்‛சேவா மித்ரா’ சர்வீஸ்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ‛சேவா மித்ரா' எனும் செயலியை அம்மாநில அரசு அப்டேட் செய்து வழங்கி உள்ளது. இதன்மூலம் 3,500க்கும் அதிகமான சேவைகளை வீட்டில் இருந்தபடியே பெற முடியும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2 வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

தற்போது அனைத்து வகையான சேவைகளையும் ஆன்லைனில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.
இதற்கு உத்தர பிரதேசமும் விதிவிலக்கல்ல. அங்கும் பல சேவைகளை ஆன்லைனில் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் உத்தர பிரதேச அரசு சார்பில் ‛சேவா மித்ரா' எனும் செயலி அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
அதாவது கொரோனா பரவலின்போது பல வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு வேலையிழந்தோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இந்த செயலி அப்டேட் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது இந்த செயலி அடுத்தக்கட்ட லெவலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் இந்த செயலி சேவையை வழங்க உள்ளது. அதன்படி இந்த சேவா மித்ரா செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்து அரசின் ஹெல்ப்லைன் எண்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி டாக்டர், நர்ஸ், மதசடங்குகளுக்கு தேவையான நபர்களை இந்த செயலி மூலம் மக்கள் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். தற்போதைய தகவலின்படி இந்த செயலி 788 அமைப்புகள் மூலம் 3,500க்கும் மேற்பட்ட சேவைகளை 4,076 நிபுணர்கள் வழங்க உள்ளனர். இந்த செயலிக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications
