‛‛என் அக்கா பிரியங்காவுக்கு எதிராக போட்டியிட முடியாது’’.. பாஜக ஆபரை உதறி தள்ளிய வருண் காந்தி!
லக்னோ: ‛‛என் அக்கா பிரியங்கா காந்தியை எதிர்த்து ரேபரேலியில் போட்டியிட முடியாது'' என பாஜக மேலிடத்திடம் அந்த கட்சியின் எம்பியும் ராகுல் காந்தியின் சித்தப்பா மகனுமான வருண் காந்தி தெரிவித்துள்ளார். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி முடிந்த நிலையில் 2ம் கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. இன்று கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு 2வது கட்ட ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1ல் கடைசி கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கு மே 20ம் தேதி (5ம் கட்ட லோக்சபா தேர்தல்) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரேபரேலியில் கடந்த முறை சோனியா காந்தி வென்ற நிலையில் தற்போது ராஜ்யசபா எம்பியாகிவிட்டார்.
இதனால் ரேபரேலியில் மகள் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளது. அதேபோல் கடந்த முறை அமேதியில் தோற்ற ராகுல் காந்தி மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் ரேபரேலி, அமேதி தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. மாறாக பாஜகவை பொறுத்தவரை அமேதியில் கடந்த முறை வென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரேபரேலிக்கு இன்னும் பாஜக வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தான் பிரியங்கா காந்திக்கு எதிராக அவரது சித்தப்பா மகனும், தம்பியுமா வருண் காந்தியை (சஞ்சய் காந்தி - மேனகா காந்தி தம்பதியின் மகன்) களமிறக்க பாஜக திட்டமிட்டது. வருண் காந்தி தற்போது உத்தர பிரதேச மாநில பிலிபட் தொகுதியின் பாஜக எம்பியாக உள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட வருண் காந்திக்கு பாஜக மீண்டும் சீட் கொடுக்காத நிலையில் அவரை பிரியங்கா காந்திக்கு எதிராக ரேபரேலியில் வேட்பாளராக்க பாஜக தயாராகி வருகிறது.
இந்நிலையில் தான் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து களமிறங்கும்படி வருண் காந்திக்கு பாஜக ஆஃபர் வழங்கி உள்ளது. ஆனால் ஆஃபரை நிராகரித்துள்ளார். அதாவது ரேபரேலியில் தன்னால் போட்டியிட முடியாது என அவர் பாஜக மேலிடத்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேரு குடும்பத்தின் மருமகளான சோனியா காந்திக்கும், மேனகா காந்திக்கும் இடையே பிரச்சனை இருந்தாலும் கூட சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருடன் மேனகா காந்தியின் மகன் வருண் காந்திக்கு நல்ல உறவு உள்ளது.
பொதுவெளியில் அவர்கள் வெளிப்படையாக சந்திக்காவிட்டாலும் கூட அவர்கள் சகோதர, சகோதரி பாசத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராகுல் காந்தி ஆன்மிக பயணம் செய்தார். கேதார்நாத் கோவில் தரிசனத்தின்போது அவர் தம்பி வருண் காந்தி மற்றும் அவரது மகளை சந்தித்தார். அப்போது இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். மேலும் வருண் காந்தியின் மகளிடம் ராகுல் காந்தி பெரியப்பா என்ற முறையில் சிறிது நேரம் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications