அடேங்கப்பா ஒரே நாளில் 35 கோடி மரக்கன்றுகளா.. இயற்கையின் சமநிலையை பாதுகாக்க முயலும் உ.பி யோகி.. சபாஷ்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஒரே நாளில் சுமார் 35 மரக்கன்றுகளை நட யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே இதேபோல ஒரே நாளில் 25 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அம்மாநில பாஜகவும், மாநில அரசும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இம்மாநிலத்தில் முதலமைச்சராக யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நீடித்ததில்லை. எனவேதான் இந்த கொண்டாட்டங்கள். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதிய திட்டங்களை அறிவிப்பதும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முடிக்கப்பட்டிருப்பின் அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைப்பதும் என யோகி ஆதித்யநாத் பிஸியாக இருக்கிறார்.

எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் 80 எம்பி தொகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியிருந்தது. அதில் ரூ.35 லட்சம் கோடி வரை உ.பியில் முதலீடு செய்யப்படும் என ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதேபோல சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இதுவரை இல்லாத அளவில் கூடுதல் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
இப்படி தொடர்ச்சியாக மக்கள் பேசும் செயல்களை யோகி ஆதித்யநாத் சிறப்பாக திட்டமிட்டு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த 6ம் ஆண்டு நிறைவையும் கொண்டாடவும் அதன் மூலம் மாநில அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் பாஜக திட்டமிட்டிருக்கிறது. எனவேதான் தற்போது இந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் பாஜக அறிவித்துள்ளது. இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், "கடந்த 6 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் சுமார் 133 கோடி மரக்கன்றுகளை நாங்கள் நட்டு வைத்திருக்கிறோம்.
இந்த அளவு மரக்கன்றுகளை நட்டால் அதனை பராமரிப்பதில் சிரமம் ஏற்படும் என பலர் கூறியிருந்தனர். எனவே நாங்கள் சமீபத்தில் இந்த மரக்கன்றுகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள தனியார் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் திருப்திகரமானதாக இருக்கின்றன. எனவே நாங்கள் மேலும் கூடுதலாக மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஜூலை 05ம் தேதியை தேர்வு செய்திருக்கிறோம். அன்று மாநிலம் முழுவதும் சுமார் 35 கோடி மரக்கன்றுகளை நாங்கள் நடுவோம்.
ஏற்கெனவே இப்படி ஒரே நாளில் சுமார் 25 கோடி மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக புதிய சாதனைக்கு தயாராகியுள்ளோம். இந்த மரக்கன்றுகளை நடும் திட்டத்தில் வனத்துறையினர் முக்கிய பங்காற்றுவார்கள். அதேபோல மற்ற துறை அதிகாரிகளும் பங்காற்ற வேண்டும். நமது நாட்டின் பாரம்பரியம் எப்போதும் இயற்கையை சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. எனவே இந்த பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதமாக நாங்கள் இந்த மரக்கன்றுகளை நட இருக்கிறோம்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் தீவிர தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்கங்களிலிருந்து தப்பிக்க இயற்கை சமநிலையை பாதுகாப்பதுதான் சிறந்த வழி என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நாம் அனைவரும் பூமியின் மகன்கள். எனவே அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications