இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்த புதிய திட்டம்! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீப காலமாக புதிய விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் , "இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்த உத்தரப் பிரதேச அரசு உறுதியேற்றுள்ளதாக" தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த வரலாற்றை யோகி ஆதித்யநாத் முறியடித்து வெற்றிகரமாக 6 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். எனவே அம்மாநில அரசு இதனை சாதனையாக கொண்டாடி வருகிறது. அதேபோல புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த மாநில அரசு உறுதி ஏற்றிருக்கிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "பதி விஹார் காலனியில் ரூ.6.18 கோடி செலவில் மினி விளையாட்டு மைதானம் விரைவில் அமைய இருக்கிறது. இதற்கு நான்தான் அடிக்கல் நாட்டினேன். இந்த பகுதி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். சண்டையும் சர்ச்சையும் நிறைந்த எப்போதும் பதட்டமான பகுதியில் இதுவும் ஒன்று.
ஆனால், தற்போது இந்நிலைமை மாறியிருக்கிறது. உத்தரப் பிரதேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் நாங்கள் விளையாட்டு மைதானங்களை கட்டி வருகிறோம். இது இளைஞர்களை விளையாட்டு நோக்கி நகர்த்துகிறது. இன்று 72 கோடி மதிப்பிலான 42 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இது தவிர நகரில் 6 இடங்களில் திருமண மண்டபங்களை கட்ட உத்தரவு பிறப்பித்திருக்கிறேன். திருமண மண்டபங்கள் இன்றைக்கு ஏழை மக்களின் கனவாக இருக்கிறது. இதனை நிறைவேற்றும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
எனவே ரூ.1 முதல் 1.5 கோடி வரை நிதி ஒதுக்கி 6 திருமண மண்டபங்களை கட்ட உத்தரவு பிறப்பித்திருக்கிறேன். இந்த மண்டபத்தில் 200-300 பேர் வரை தாராளமாக அமரலாம். இது சாமானிய மக்களுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு விடப்படும். இப்படியாக சாமானிய மக்களின் அரசாங்கமாக இந்த அரசு இருக்கிறது. எளிய மக்களின் கனவுகளை நிஜமாக்குவதே இந்த அரசின் பிரதான நோக்கமாகும். இளைஞர்களை நாங்கள் நல்வழிப்படுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications