உத்தரப் பிரதேசத்தில் ஆட்டம் காட்டிய கனமழை! 'இதுதான்' முக்கியம்.. அதிகாரிகளுக்கு உத்தரவு போட்ட யோகி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் விவசாயிகளுக்காக புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். மட்டுமல்லாது, விவசாயிகளின் நலனை பாதுகாப்பதுதான் அரசின் பிரதான பணி என்றும் கூறியுள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்றும் சரியாக ஒரு ஆண்டுதான் இருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த முறையும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதற்கு பெரும்பாலான எம்பிக்கள் பாஜக எம்பிக்களாக இருக்க வேண்டும். இதற்காக அதிக எம்பி தொகுதிகளை கொண்டுள்ள மாநிலங்களை லிஸ்ட் போட்டு அம்மாநிலங்களில் பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம்தான் உத்தரப் பிரதேசம். இம்மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன.

மட்டுமல்லாது இம்மாநிலத்தில் பாஜகதான் தற்போது ஆட்சி செய்து வருகிறது. எனவே இந்த 80 தொகுதிகளையும் லட்டு போல அள்ள பல திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் என அனைத்திலும் இந்த அஜென்டாவின் ஒரு பகுதிதான் என்று சொல்லப்படுகிறது. என்னதான் இப்படி சில விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இதில் சில பாசிட்டிவ்வான விஷயங்களும் உள்ளன என்பதை புறந்தள்ளி விட முடியாது. அதாவது உத்தரப் பிரதேசத்திற்காக இதற்கு முன்னர் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு எதுவும் உத்தரப் பிரதேசத்தில் நடந்தது கிடையாது. மும்பை, டெல்லி போன்ற இடங்களில்தான் இந்த மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பாஜக முதல் முறையாக இந்த மாநாட்டை உத்தரப் பிரதேசத்திலேயே நடத்தி காட்டியிருக்கிறது.
இதனையடுத்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அனைவரின் கவனத்திற்கும் உள்ளானது. ஏனெனில் இதுவரை இல்லாத அளவில் இந்த பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், கல்வி, மருத்துவம் மற்றும் உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தற்போது இதனையடுத்து யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சாராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜகவினர் கொண்டாட தொடங்கியுள்ளனர். ஏனெனில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ந்து 6 ஆண்டுகளாக இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது கிடையாது. எனவே யோகி ஆதித்யநாத் இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை யோகி அறிவித்து வருகிறார். குஷி நகருக்கு புதிய மருத்துவ கல்லூரி, உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட புதிய திட்டங்களை அறிவிப்பதுடன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று (ஏப். 01) மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், "விவசாயிகளின் நலனை பாதுகாப்பதுதான் பாஜக அரசின் பிரதான பணி" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்படக்கூடாது.
கடந்த 24 மணி நேரத்தில் இயல்புக்கு மாறாக பல மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. அதேபோல 9 மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்திருக்கிறது. ஆலங்கட்டி மழையால் பயிர்கள் கணிசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து சரியான முறையில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இழப்பீடு மதிப்பீடு நியாயமானதாக இருக்க வேண்டும். அதேபோல நிவாரண ஆணையர் அலுவலக விதிகளின்படி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications