மக்கள் தங்கள் கடமையை நியாயமாக செய்தால் நாம் சீனாவை வீழ்த்த முடியும்- யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: நாட்டின் குடிமகன்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையை நியாயமாக செய்தால் நாம் சீனாவை வீழ்த்தி உலக அளவில் முதல் இடத்தை பெற முடியும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தை முழுமையாக கைப்பற்ற பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நலத்திட்டங்களை யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத்தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. இப்படி இருக்கையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

இதற்கு முன்னர் இருந்த முதலமைச்சர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் இந்த பதவியில் நீடித்ததில்லை. இப்படி இருக்கையில் யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டுகள் சாதனையை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தல், சமூக செயற்பாட்டிற்கான நிகழ்ச்சிகளை நடத்துதல் என யோகி ஆதித்யநாத் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், நேற்று (மார்ச் 28) பூர்வாஞ்சல் பகுதியில் மாநிலத்தின் புகழ்பெற்ற மருத்துவரான ஒய்.டி. சிங்கின் சிலையை திறந்து வைத்துள்ளார். பின்னர் மக்களிடையே பேசிய அவர், "நாட்டின் குடிமகன்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையை நியாயமாக செய்தால் நாம் சீனாவை வீழ்த்தி உலக அளவில் முதல் இடத்தை பெற முடியும்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, "நமது நாட்டை உலக தரத்தில் கட்டியெழுப்புவதில் உள்ள அவசியத்தையும் பொறுப்பையும் நாம் உணர வேண்டும். அதற்கு முன்னர் நாம் நமது பாரம்பரியத்தை உணர வேண்டும். அதேபோல நாம் எந்த பாரபட்சமும் இன்றி நமது கடமைகளை செய்ய வேண்டும். இதேபோலதான் அரசாங்கத்தின் திட்டங்களும் எந்த பாகுபாடும் இன்றி மக்களை சென்று சேர்கிறது. அதே பாணியில் நீங்களும் செயல்பட வேண்டும். இன்று நாம் போற்றும் மருத்துவர் ஒய்.டி.சிங் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். அவர் மருத்துவராக வேண்டும் என்று தேர்ந்தெடுத்ததிலிருந்து சமூக சேவை என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
ஒரு கட்டத்தில் இங்கிருந்த மருத்துவமனை மூடப்பட்டது. ஆனால், டாக்டர் சிங் தனது வீட்டையே மருத்துவமனையாக மாற்றிவிட்டார். அவருடைய சேவை இல்லையெனில் தற்போது இந்த அளவுக்கு கிழக்கு உத்தரப் பிரதேசம் உயர்ந்திருக்காது. இந்த மனநிலைதான் தற்போது நமக்கு தேவை. மருத்துவர் சிங் அவரை புரிந்துகொண்டார். அதேபோல நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களை புரிந்துக்கொள்ள வேண்டும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications