அடிதூள்.. வேகமாக வளரும் பொருளாதாரம்! பாஜக ஆட்சிதான் காரணம் என யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: மற்ற பெரிய மாநிலங்களை காட்டிலும் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் பொருளாதார ஆலோசகர் கே.வி.ராஜு மற்றும் லக்னோவின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, திட்டமிடல் துறையின் ராஜேஷ் சவுகான் ஆகியோர் தலைமையில் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில்தான் இந்த தகவலை யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். பாஜக அரசு பொறுப்பேற்ற கடந்த 6 ஆண்டுகளில் மாநிலம் பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோல உள்கட்டமைப்பு அதிகரிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க உதவியது. கடந்த 2017-18 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பொருளாதாரத்தின் அளவு அடிப்படையில் ஐந்தாவது பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், வேகமான விகிதத்தில் (14.7 சதவீதம்) வளர்ந்துள்ளது.
இந்நிலையில் எதிர் வரும் 2027-28ம் ஆண்டிற்குள் மாநிலத்தை 1-டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023ம் ஆண்டிலேயே மாநிலத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்கை எட்டியது. தொழில்துறை வளர்ச்சி, வேளாண்மையில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றம் போன்றவைதான் இதற்கு முக்கியமான காரணமாகும். கடந்த 2015-2016களில் 36 சதவிகிதமாக இருந்த வறுமை என்பது தற்போது 18 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.
வேலையின்மை விகிதம் வெறும் 5.2 சதவிகிதமாக சுருங்கியுள்ளது. இந்த மாற்றத்திற்கு அரசு மேற்கொண்ட பல்வேறு நலன் மற்றும் சீர்திருத்தத் திட்டங்களே காரணம். மாநிலத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2016-ல் ரூ.51,000 கோடியிலிருந்து தற்போது 1.24 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. 2012-2017 ஆம் ஆண்டில், உ.பி.யில் வங்கி வணிகம் ரூ. 12.29 டிரில்லியனாக இருந்தது, இப்போது அது 2017-22ல் ரூ. 22.6 டிரில்லியனாக அதிகரித்துள்ளது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை சுட்டிக்காட்டிதான் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications