கடந்த 6 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்த பெண் காவலர்களின் எண்ணிக்கை! மாஸ் காட்டும் உத்தரப் பிரதேசம்
லக்னோ: உத்தரப் பிரதேச காவல்துறையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 6 ஆண்டுகளில் 10 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் ஹத்ராஸில் நேற்று பேரணி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த அவர், "20% இடஒதுக்கீடு கொள்கையால் உ.பி காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "20% இடஒதுக்கீடு கொள்கையால் உ.பி காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வெறும் 10 ஆயிரம் பெண் போலீசார்தான் இருந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பாஜக அரசு பெண்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கு இது ஒன்றே சான்று. அதேபோல மத்திய அரசு கொண்டு வந்த 33% இடஒதுக்கீட்டை நான் மனதார வரவேற்கிறேன்.
உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் பாஜக அரசு அமல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும், மாநிலம் முழுவதும் உள்ள ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என ஒவ்வொருவருக்கும் சரியாக சென்று சேர்கிறது. கடந்த ஒன்பதரை ஆண்டுகளில், சாதி, மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் யாருக்கும் எந்தப் பாகுபாடும் இல்லாத புதிய இந்தியா உருவானதைக் கண்டோம். அந்த வழியில் உத்தரப் பிரதேசம் புதிய இந்தியாவின், புதிய அங்கமாக உருவெடுத்து வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications