மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் உ.பிதான் முதலிடம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் உத்தரப் பிரதேச அரசு முதல் இடத்தில் இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் யோகி ஆதித்யநாத். இதற்கு முன்னர் முதலமைச்சராக இருந்த யாரும் தொடர்ந்து 6 ஆண்டுகள் இந்த பதவியில் நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை தற்போது யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். எனவே இதனை கொண்டாடும் விதமாக அம்மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்த திட்டங்களை யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்து வருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் உத்தரப் பிரதேச அரசு முதல் இடத்தில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், "உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.35 லட்சம் கோடி வரை முதலீடுகளை ஈர்த்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு விருப்பமான மாநிலம் உத்தரப் பிரதேசம் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
பிரதமர் ஆவாஸ் யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன், சௌபாக்யா யோஜனா, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை என மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் இந்த மாநில அரசு சிறப்பாக அமல்படுத்தியுள்ளது. இதுபோன்று ஏராளமான திட்டங்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை அறிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இதனை சாத்தியமாக்கிட அதிகாரிகள் எப்படி பணியாற்றுகிறார்கள் என்பதையும் இந்த அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
52.5 மக்களுக்கு வீடுகள், 1.75 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர், 2.61 கோடி கழிப்பறைகள் ஆகியவற்றை இந்த அரசு செய்து கொடுத்திருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 8.56 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் உத்தரப் பிரதேசம் அளவுக்கு வேறு எங்கேயும் வங்கி கணக்குகள் தொடங்கப்படவில்லை. இது மட்டுமல்லாது சிறு குறு தொழில்களை பாஜக அரசு தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறது. தற்போது வரை சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாளர்களுக்கு ரூ.1,190 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளையும் கைப்பற்றிட வேண்டும் என பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாகதான் தற்போது யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ள புதிய திட்டங்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.












Click it and Unblock the Notifications