பாஜக ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது! உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: சமூகத்தை மேம்படுத்த வேண்டுமெனில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச அரசின் சமூக நலத்துறை சார்பில் ஏழை எளிய தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில், 68 முஸ்லிம்கள் உட்பட 1,432 தம்பதிகள் திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் திருமணம் ஆகியவற்றில் தனது அரசு உறுதியாக உள்ளது. கோரக்பூரில் அனைத்து பெண்களையும் கொண்ட பிஏசி பட்டாலியன் விரைவில் நிறுவப்படும்.

மட்டுமல்லாது நமது மாநில காவல்துறையில் பெண்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. ஒரு சமூகம் முன்னேற வேண்டும் எனில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும். தற்போது பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையாக வரதட்சணை இருக்கிறது. இந்த வரதட்சணையை ஒழிக்க வெகுஜன திருமணம் அவசியமாகிறது.
அதன்படி இன்று முக்யமந்திரி சமுஹிக் விவா யோஜனா திட்டத்தின் கீழ், 68 முஸ்லிம்கள் உட்பட 1,432 தம்பதிகள் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. எங்கு பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறதோ அங்குதான் வளர்ச்சி சாத்தியமாகும். உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு உரிய அங்கீகாரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவேதான் மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், 2 லட்சம் ஜோடிகளுக்கு வெகுஜன திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
1947 முதல் 2017 வரை, உ.பி காவல்துறையில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 10,000 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் இந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேபோல வெகுஜன திருமணத்திற்காக கடந்த காலத்தில் ஒரு ஜோடிக்கு ரூ.31 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜக அரசு இந்த தொகையை ரூ.51 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இப்படியாக அனைத்து துறைகளிலும் பாஜக அரசு பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications