வரி ஏய்ப்புக்கு செக்.. புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறிய டெக்னாலஜி.. யோகி ஆதித்யநாத் மாஸ்டர் பிளான்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வரி ஏய்ப்பை தடுக்கவும், புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலங்களிலும் வரி வருவாயை அதிகரிப்பதும், மற்றும் புதிய வருவாய் ஆதாரங்களை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது தான் அந்தந்த மாநிலங்களை கடனில் இருந்து தடுப்பதற்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

இதனை உணர்ந்து தான் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களின் வரி வருவாயை அதிகரிக்கவும், புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறிவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது உத்தர பிரதேச மாநிலத்தில் முதலீடு மற்றும் வரி வருவாய் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை யோகி ஆதித்யநாத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 2023-2024ம் ஆண்டுக்கான மாநில அரசின் வருவாய் குறித்த ஆய்வுக்கூட்டம் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்தது. இதில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.2.62 லட்சம் கோடிக்கு வருவாயை வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். 2023-2024 ஆம் ஆண்டின் முதல் 2 காலாண்டுகளில் மாநில அரசு ரூ.92,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது.
அதோடு வரி ஏய்ப்பை தடுக்க வேண்டும். புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறிய வேண்டும். மாநிலத்தில் வரி ஏய்ப்பைத் தடுக்கவும், புதிய வருவாய் ஆதாரங்களைக் கண்டறியவும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் வருவாய் இழப்பை ஏற்படுத்துவது என்பது மாநிலத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்கான இழப்பாகும். ஜிஎஸ்டி உள்பட பிற வரி ஏய்ப்புகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சுரங்கத்துறை, முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை, கலால் துறை, போக்குவரத்து உள்பட பல துறைகளிலும் வருவாய் வசூல் அதிகரித்துள்ளது. இது திருப்திகரமாக உள்ளது. இதனை அப்படியே வரும் நாட்களிலும் பின்பற்ற வேண்டும். விழாக்காலம் நெருங்கி விட்டது. இதனால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு மக்களின் நலன் கருதி மணல் உள்ளிட்ட பிற கட்டுமானப் பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மாநிலத்தில் வருவாயாக மக்களிடமிருந்து பெறப்பட்ட பணம் பொது நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது தொடரும்'' என்றார். இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச மாநில நிதி அமைச்சர் சுரேஷ் கண்ணா, கலால் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் (தனி பொறுப்பு) நிதின் அகர்வால் உள்பட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications