1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்! இந்த '10' துறைகள் முக்கியம்.. யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தை அடுத்த 4 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து எம்பி தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே பல்வேறு திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது உத்தரப் பிரதேசத்தை அடுத்த 4 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றும் அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.6.90 லட்சம் கோடி மதிப்பில் முதலீடுகள் கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தையடுத்துதான் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்து யோகி அரசு முடிவெடுத்துள்ளது. எனவே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, விவசாய உற்பத்தி, சமூகப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு, மருத்துவம் மற்றும் சுகாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் மற்றும் வருவாய் சேகரிப்பு உள்ளிட்ட 10 துறைகளை மேம்படுத்திட அரசு முடிவெடுத்துள்ளது.

இதில் ஒவ்வொரு துறையையும் கூடுதல் தலைமைச் செயலாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் பொறுப்பெடுத்துக்கொள்வார்கள். இந்த துறைகளில் உள்ள இடர்பாடுகளை களைந்து துறையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. இந்த பணிகள் அனைத்தும் 2027ம் ஆண்டுக்குள் செய்து முடித்துவிட வேண்டும். தற்போது உத்தரப் பிரதேசத்தின் மொத்த மாநில உற்பத்தி 8% ஆக இருக்கிறது. மொத்த தானிய உற்பத்தியில் 20 சதவிகிதத்தை மாநிலம் உற்பத்தி செய்கிறது. இதனை அதிகரிப்பதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். ஆனால் இதற்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வெறுமென அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் வேலை நடந்தால் மாற்றம் முழுமையாக வந்துவிடாது.
கோவிட் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளை போல தற்போது 1 டிரில்லியன் இலக்கு நோக்கிய பயணத்திற்கான திட்டத்தை வகுத்திருக்கிறது. எனவே மக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் சாதனையை நிறைவு செய்தும் தொடர வேண்டும் என்று யோகி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications